Friday, 23 March 2012

அமானுஷ்யங்கள் பற்றி ஸ்ரீ அன்னை – 1

அமானுஷ்யங்கள் பற்றி ஸ்ரீ அன்னை – 1

ஸ்ரீ அன்னை
கே: நம்மில் எத்தனை பேருக்குக் கடந்த பிறப்புகள் நினைவில் இருக்கின்றன?
 ப: நம் உணர்வின் ஏதாவதொரு பாகத்தில் நம் எல்லோருக்குமே நினைவில் இருக்கும். ஆனால் இது அபாயகரமான விஷயமாகும். ஏனென்றால் சுவையான கற்பனைக் கதைகள் மனித மனத்துக்கு மிகவும் பிடித்தவையாகும்.  மறுபிறப்பு என்னும் உண்மையைப் பற்றி மனித மனம் ஏதாவது கொஞ்சம் தெரிந்து கொண்டு விட்டால் போதும், அது உடனேயே அதைச் சுற்றி அழகிய கதைகளைக் கட்ட விரும்புகிறது. …… இவற்றுக்கும் ஆன்மீக வாழ்விற்கும் சம்பந்தமேதும் இல்லை.

நம் முற்பிறவிகளைப் பற்றிய மெய்யான நினைவு, பூரண ஞானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பது உண்மைதான்.  ஆனால் அது இதுமாதிரியான கற்பனைகளால் வருவதில்லை.

கே: மறுபிறப்பு பற்றி…
 ப: மறுபிறப்பைப் பொருத்தவரை எல்லோருக்கும் பொருந்தக் கூடிய பொது விதி என்று ஏதும் கிடையாது. சிலர் கிட்டத்தட்ட உடனேயே திரும்பப் பிறக்கிறார்கள். தம் குழந்தைகளிடம் மிகவும் பற்றுதல் வைத்துள்ள பெற்றோர்களுக்கு பெரும்பாலும் இப்படி நடக்கிறது. அவர்கள் இறக்கும்போது, அவர்களில் ஒரு பாகம் அவர்களுடைய குழந்தைகளிடம் ஒன்றிக் கொள்கிறது. சிலர் மறுபிறப்பு எடுக்க நூற்றாண்டுகள் அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூடப் பிடிக்கலாம். தமக்குப் பொருத்தமான சூழலை அளிக்கக் கூடிய வாய்புகள் பக்குவமடையும் வரை அவர்கள் காத்திருக்கிறார்கள்.

கே: ஆவிகள், பேய்கள் பற்றிச் சொல்லுங்கள், அவை உண்மைதானா?
 ப: ஆம். அவை சட உலகத்துக்கு அடுத்தாக உள்ள தளத்தில் வசிக்கும் ஜீவன்களாகும். அதைப் பிராண உலகம் என்கிறோம். இந்தப் பிராண உலகம் ஆசைகள், உந்துதல்கள், வெறிகள் மற்றும் வன்முறை, பேராசை, சூது, பற்பல வகையினா அறியாமை போன்றவையெல்லாம் அடங்கிய உலகமாகும். ….. அந்த உலகத்தின் உயிர்களுக்கு சட உலகத்தின் மீது இயல்பாகவே ஒரு விதமான பிடி உண்டு. சட உலகத்தின் மீது அவை நம்முடைய மிகத் தீய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.

மனிதர்கள் இறந்த பிறகு அவர்களுடைய பாகங்களில் சில சட தளத்துக்கு அருகில் உள்ள பிராணச் சூழலில் தொடர்ந்து நீடிக்கின்றன. அந்த எஞ்சிய பாகங்கள் இப்படிப்பட்ட பிராண ஜீவன்களாக ஆவதுண்டு. இறந்த மனிதனின் ஆசைகள், வேட்கைகள் ஆகியவை அவனது உடல் அழிந்த பின்பும் தம் வடிவத்தோடு அங்கே தொடர்ந்து மிதந்து கொண்டிருக்கின்றன. அடிக்கடி அவை தம்மை வெளிப்படுத்தி திருப்தியடைவதற்காகச் செய்லபடுகின்றன. இவ்வாறுதான் ஒருவகையான பிராண லோக ஜீவன்கள் தோன்றுகின்றன. ஆனால் இவை அற்பமானவையாகும். இவற்றைச் சமாளிப்பது முடியாத காரியமல்ல.

ஆனால் ஒருபோதும் மனித வடிவத்தில் இருந்திராத வேறு வகை உயிர்கள் உண்டு; அவை மிக ஆபத்தானவையாகும். அவை பூமியில் மனித உடலினுள் ஒருபோதும் பிறக்காதவையாகும். அப்படி உடலில் பிறந்து சடப்பொருளுக்கு அடிமையாவதை விட, அவை தம் பிராண உலகிலேயே தங்கிக் கொண்டு, அங்கிருந்து பூமியிலுள்ள உயிர்களின் மீது ஆற்றலோடு விஷமத்தனமான ஆட்சி செலுத்துவதையே விரும்புகின்றன.

அவை முதலில் ஒரு மனிதனை தன் கட்டுப்பாட்டின் கீழ் படிப்படியாகக் கொண்டு வருகின்றன. பின்னர் அவனது ஆன்மாவையும், மனித மனத்தையும் வெளியேற்றி அவனை தம்முடைய முழு உடைமை ஆக்கிக் கொள்கின்றன. இந்தப் பேய்கள் புவியிலுள்ள ஒரு மனித உடலைப் பீடித்துக் கொள்ளும்போது அவை மனிதனைப் போலத் தோன்றலாம். ஆனால் அங்கே மனித இயல்பு இருக்காது. ஆகவே இவ்வகைப் பிராண உலக ஜீவர்களோடு தொடர்பு கொள்வது எவ்விதத்திலும் நன்மையைத் தராது.

கே: மரணத்தின் பின்….??
 ப: மனிதன் சட உடலில் பாதுகாப்பாக, சௌகரியமாக இருக்கிறான். உடலே அவனுடைய பாதுகாப்பாகும். சிலர் தம் உடல்களை மிக இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள். மரணத்துக்குப் பின் உடல் இல்லாதபோது எல்லாம் இப்போதை விட நன்றாக இருக்கும், எளிதாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் உடல்தான் உன் புகலிடம். …. சிலர் இந்த உடலில் இருப்பது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது என்கிறார்கள். மரணமே விடுதலையாக இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.

அமானுஷ்யங்கள் பற்றி ஸ்ரீ அன்னை – 2

ஸ்ரீ அன்னை
கே: முற்பிறவிகள் குறித்து…
ப: கடந்த வாழ்வுகளின் நினைவு என்று சொல்லப்படுவது, உள்ளிருந்து அவ்வப்போது தற்செயலாகக் கிடைக்கும் சில குறியீடுகளை வைத்துப் புனையப்படுவதாக அல்லது வேண்டுமென்றே செய்யப்படும் மோசடியாகவே பெரும்பாலும் இருக்கிறது. தம் விலங்கு வாழ்வுகளைக் கூட நினைவில் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் பலர் இருக்கிறார்கள். உலகத்தின் இந்த அல்லது அந்தப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த இப்படிப்பட்ட குரங்காக இருந்ததாக அவர்கள் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் இதில் எதையாவது நிச்சயமாகச் சொல்ல முடியும் என்றால் அது இதுதான். “குரங்குக்கு தன் சைத்திய உணர்வுடன் எந்தத் தொடர்பும் இருக்காது என்பதால் அதன் அனுபவங்களில் இம்மியும் கூட சைத்திய புருஷனால் கிரகிக்கப்படுவதில்லை. அந்த விலங்கு உடல் அழியும்போது, புறக் குரங்கு இயல்பின் பதிவுகளும் அதனுடன் மறைந்து போகின்றன. அவற்றை நினைவில் வைத்திருப்பதாகப் பாசாங்கு செய்வது, இந்தச் சிக்கல்களின் மெய்யான தகவல்களைப் பற்றிய மிக மோசமான அறியாமையைத் தான் காட்டுகிறது.

 கே: இந்த ஜென்மத்தில் செய்ய முடியாதவற்றை மறுஜென்மத்தில் செய்ய இயலுமா?      
அடுத்த ஜென்மம் பற்றிய விசாரணை எல்லாம் சுத்த மடத்தனம். இந்த ஜென்மத்தில் கடைசி மூச்சிருக்கும் வரை இது நமக்களிக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இன்று செய்வதை நாளை செய்யல்லாம் என்று ஒத்திப்போடும் சோம்பலைப் போன்றது தான் இந்த ஜென்மக் கடன்களை அடுத்த ஜென்மத்திற்காய் விட்டு வைப்பது
நாம் இந்தப் பிறவியில் சாதிக்க முடியாததையோ, தன்னைத் தான் வெல்லும் சித்தியையோ மரணத்திற்குப் பின் ஒருவன் .அடையலாம் என நினைப்பது முடியவே முடியாத ஒன்றாகும்.
இம்மண்ணுலக வாழ்க்கையே வளர்ச்சிக்கும், சித்திக்கும் ஆன ஷேத்திரம்.

கே: இறையருள் பற்றி விளக்குங்கள்….
ப: இறையருள் என்பது நீ அடைய வேண்டிய இலக்கை நோக்கி உன்னைச் செலுத்தும் உந்துதல் ஆகும். அதனை வெறும் மனதால் எடை போட முடியாது.
இறையருள் செயலாற்றும் பொழுது, அதன் விளைவு மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது மரணம் போன்றதாகவும் இருக்கலாம். அல்லது விபத்து, இழப்பு போன்றதாக இருக்கலாம். ஆனால் அதன் விளைவு எப்பொழுதும் நல்லதையே மனிதனுக்குத் தரும். ஒருவன் ஆன்மிகப் பாதையில் பாய்ந்து செல்வதற்காக இறைவன் அளிக்கும் அடியாகவோ துன்பமாகவோ ஒருவன் அதனைக் கருத வேண்டும். இறையருள் சித்தியை  நோக்கி மிக விரைவாக ஒருவனை முன்னேறச் செய்வதாகும்.
இறையருளால் விளைவது எதுவாக இருந்தாலும், அது மரணமோ, உயிரிழப்போ, விபத்தோ, எதுவானாலும் இறையருள் செயல்படும் பொழுது கவலைப் படத் தேவையில்லை. ஏனெனில் அது எப்பொழுதும் ஒருவனின்  நன்மைக்காகவே இருக்கும்.
எது நடந்தாலும் அது நன்மைக்கே நடக்கிறது என நினைத்து இறை அருளைப் பூரணமாகச் செயலாற்றும்படி விட்டு விட வேண்டும்.



கே: தெய்வ அருள் செயல்பாடு குறித்து...
ப: ஒரு பொழுதும் தெய்வ சக்திகளை இழுக்க முயலாதீர்கள். முன்னேற வேண்டும் என்ற ஆசையினால், ஆத்மானுபூதி பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் ஒரு பொழுதும் தெய்வத்தை உங்கள் பால் இழுக்க முயலாதீர்கள். இது முக்கியமான ஒன்றாகும். தெய்வ சக்தியை உங்களை நோக்கி இழுக்க முயல்வது உங்களது அகங்காரத்தைக் குறிப்பதாகும்.
முற்றிலுமாக இறைச் சக்தி உங்களுள் நிரம்பும் படி உங்களைத் திறவுங்கள். ஆனால் தெய்வத்தை இழுக்க முற்படவேண்டாம். அது உங்கள் தகுதிக்கும், பற்றற்ற நிலைக்கும் ஏற்பத் தானே நிகழக் கூடியதாகும். உங்கள் ஏற்புத் திறனை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் ஆர்வமுறலாம். அர்ப்பணிக்கலாம். உங்களைத் திறக்கலாம். ஆனால் ஒரு பொழுதும் எடுத்துக் கொள்ள முயற்சிக்காதீர்கள். ஏதாவது தவறாக நடந்து விட்டால் அனைவரும் இறைவனையே குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் தவறுகளுக்குப் பொறுப்பு தெய்வம் அன்று.
மனிதர்களின் பேராசை, தன்னலம், அஞ்ஞானம், பலவீனம், ஏற்பின்மை போன்றவையே!

No comments:

Post a Comment