Showing posts with label அமானுஷ்யங்கள். Show all posts
Showing posts with label அமானுஷ்யங்கள். Show all posts

Friday, 23 March 2012

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா… எங்கே… எப்படி…என்னவாக இருக்கிறார்… ஆவிகள், பேய்கள் எல்லாம் உண்மைதானா?…
முற்பிறவி, மறுபிறவிகள் எல்லாம் உண்மையா… பொய்யா…?
ஏன் மனிதப் பிறவியில் ஏழை, பணக்காரன், நோயாளி, பைத்தியம் என்று வேறுபாடுகள்… அதற்கான காரணம் என்ன…
இறப்பின் பின் என்ன நிகழ்கிறது….
பிறப்பதற்கு முன்னால் இருக்கும் நிலை என்ன…
இவை பற்றி எல்லாம் அறிய இந்தச் சுட்டிக்குச் செல்லுங்கள்…
ஆறு அத்தியாயங்களையும் நேரம் ஒதுக்கி முழுமையாகப் படியுங்கள்.
மேற்கண்ட வினாக்களுக்கு பதில் கிடைக்கும்.
இது பற்றி தோழர் தமிழ் சிங்கத்தின் கேள்வியிலிருந்து…
தாங்கள் ”எனக்கு பிடித்த தளம்” என்ற பெயரில் மரணத்திற்கு அப்பால் என்று ஒரு வெப்சைட் ஐ நினைவு கூர்ந்த்துல்லீர்கள், சரி அதன் முழு கதையையும் படித்து விட்டீர்களா…..???
படிக்காமல் இருந்ததால் தயவு செய்து படித்து முடித்துவிடவும்….,,
நான் என் நண்பருடன் அதை படித்தேன்
அவர் சொன்னார் ”என்னைய கொடுமையுது இங்கதான் படம் நடத்தி
பரிச்சை வைச்சி கொல்றாங்க-ன்ன செத்த பிறகும் விடமாட்டங்கள ”……. என்றார்
”அப்படியானால் பரிச்சையில பெயில் ஆனா மாணவர்கள் தற்கொலை செய்துக்கிறாங்களே… அவங்க நிலைமையே நினச்ச தான் பாவமா இருக்கு” என்றார் ……
இதை பற்றி தங்கள் கருத்து என்ன…..????
அந்த பக்கத்தில் முதல் 111 வரிகளில் ,. 100 வரிகள் நன்றாகவே இருந்தது, ஆனால் அதற்க்கு பிறகு தான் சற்று வயிற்ரை கலக்குகிறது, சரி அதுவும் போகட்டும், உண்மை அதுவானால் பிறகு என் நிலைமை என்னவாகும்……..
எனது பதில்…
தமிழ் சிங்கம்…
முழுவதுமாகப் படித்துப் பார்த்து விட்டேன். பல விஷயங்கள் முன்பே பல நூல்களில் படித்தது. சில உணர்ந்தது (??!!). மொத்தத்தில் பகவான் ரமணர்தான் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வருகிறார். – There is no Others.. மற்றும் அவரது புகழ் பெற்ற கருத்துக்களில் ஒன்று உடன் நினைவிற்கு வருகிறது.
“எண்ணங்கள் அடங்கினால் மனம் அடங்கும். மனம் அடங்கினால் ஆத்ம சொரூபம் தெரியும். எல்லாவற்றிற்கும் காரணம் எண்ணங்களே. ஆகவே புதிய புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர்கள். ’நான் யார்’ என்பதை உள்ளுக்குள் ஆராய்ந்து பார்த்தால் ’உண்மை’ விளங்கும்” இதைத்தான் இந்தக் கட்டுரை பல்வேறு விதங்களில், பல கருப்பொருள்களில் சுட்டுவதை உணர்கிறேன். ராமகிருஷ்ணரின் ‘கர்மா’ தத்துவமும், வள்ளலார் போதித்த அன்பின் மகிமையும் இவற்றைப் படிக்கும் போது நன்றாகவே புரிகிறது. நமது உள்ளத்தை முழுமையாக தூய்மைப்படுத்தி வாழ வேண்டிய அவசியத்தை இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.
அதே சமயம் தியானத்தின் வலிமையும், அருமை, பெருமையும் புரிகிறது. (இங்கே ’தியானம்’ என்று சொல்லப்படுவது நவீன ’உடான்ஸ் சாமியார்கள்’ காசு வாங்கிக் கொண்டு சொல்லித் தரும் மூச்சுப் பயிற்சியை அல்ல. அது உடலுக்கு வேண்டுமானால் – தற்காலிகமாக – நன்மை தரலாம். ஆனால், ஆன்ம லாபத்திற்கு எந்த விதத்திலும் பயன் தராது என்பது என் திடமான நம்பிக்கை.) உடலை சரியாக, ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியமும் புரிகிறது. (நான் அதில் சற்று தவறி விட்டேன்)
ஆனாலும் சில கேள்விகள் உள்ளன. சில விளக்கங்களும் தேவைப்படுகின்றனதான்.
//ஆத்மாவானது பிறவியெடுக்க எத்தனிக்கையில் தனது பிறக்கும் சூழ்நிலைகள் சம்பந்தமான விடயங்களைப் பற்றி அறிவதற்கு நாமிங்கே பகிடியாக ‘மேலுலகக் கணணி’ என்று செல்லமாக அழைக்கும் ஒரு விதமான கொம்பியூட்டர் சிஸ்டத்துடன் தொடர்பு கொண்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். அது மனித மூளைக்கு எட்டாத, சிக்கலான ஒரு பதிவு முறையாகும். ஆனால் இங்கேயிருப்பவர்கள் அதனை விளங்கிக்கொள்வார்கள். ஒரே நேரத்தில் பல ஆத்மாக்கள் பிறவியெடுக்க விரும்புவதால் இப்பதிவு முறை வசதி. ஒரு குறிப்பிட்ட தாய்க்குப் பலர் போட்டியிட்டால் இங்கே பதியப்பட்டிருக்கும் அவர்களின் தகைமைகளின் அடிப்படையில் அந்தத் தாய்க்குப் பொருத்தமானவர் தீர்மானிக்கப்படுவார்.//
இதுதான் கொஞ்சம் புரியவில்லை அல்லது இடிக்கிறது. கம்ப்யூட்டர் என்ற வார்த்தை ஜஸ்ட் விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். மற்றபடி தகவல் நான் படித்த/கேள்விப்பட்ட வரை மிக மிகச் சரியானதே! (பின்னாலே அதற்கு விளக்கமும் வருகிறது. எண்ணப்பதிவுகளின் தொகுப்பைத் தான் அப்படி – கம்ப்யூட்டர் சிஸ்டம் என்று – அழைக்கிறார்களாம்)
//பூவுலகிலிருக்கும் கொம்பியூட்டர் முறையானது இங்கிருக்கும் கொம்பியூட்டரின் பகுதிகளில் வேலை செய்தவர்களின் மனங்களின் மூலம் கொண்டு வரப்பட்டு உருவானதே. இங்கயுள்ள எல்லையில்லாத அறிவுப்புலனின் ஒரு பகுதியைப் பெற்றே உருவானதாகும். அதே போலவே எடிசன் போன்ற ஏனைய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும். நினைவு படுத்திப்பார், “இந்த இடம் ஒளிரட்டும் என்றவுடன் ஒளிவரவில்லையா?” இங்கேயிருக்கும் அதே வடிவத்தையே மனித இனத்தின் பாவனைக்காக என்றே இருக்கும் இயற்கை மூலதனங்களைக் கொண்டும் எடிசன் பெளதீகமாக உருவாக்கினார்.//
இது முழுக்க முழுக்க உண்மை. எடிசனின் ஆய்வுக்குப் பல ஆவிகள் உதவின என்பது உண்மை.
// நேரகாலம் கூடிவரும்போது குழந்தை பிறக்கும் தருணத்தில் ஆத்மாவானது உடலுள் புகும். சாதாரணமாகப் பிறக்கும் நேரத்தில் தான் இது நடக்கும். சில தருணங்களில் பிறப்பதற்குச் சற்று முன்னரோ, அல்லது சற்றுப் பின்னரோ புகலாம். ஆத்மா கூடுதல் நேரத்திற்குத் தயங்கினால் குழந்தை உயிர்வாழாது”.//
இது புரியவில்லை. ’குழந்தை பிறக்கும் தருணத்தில்தான் ஆத்மாவானது உடலுள் புகும்’ என்று சொன்னால் இந்திய புராணங்கள், அபிமன்யு, பிரகலாதன் கதைகள் எல்லாம் பொய் அல்லது மிகை என்றாகி விடும். திருமூலர் சொன்னதற்கு இது மாறாக உள்ளது. நான் அறிந்தது ’உடலில் மூளை வளர்ச்சியுறும் காலத்திலேயே ஆன்மா தாயின் உடலுக்குள் பிரவேசித்து விடுகும்’ என்பது தான். ஆகவே இதனை முழுமையாக ஏற்க இயலவில்லை. (ஆனால் பின்னால் ‘முன்பின்னோ நுழையும் ஆத்மா’ என்று வருகிறது. அந்த ’முன்’, ’பின்’ பற்றிய விளக்கங்கள் இல்லை. டாக்டர் இயான் ஸ்டீவன்சனின் ஆய்வில் இது போன்ற இரண்டு ’பின்’ ஆத்மா நுழைந்த சம்பவங்கள் இருக்கின்றன )
//இறந்தே பிறக்கும் குழந்தைகளின் விஷயத்தில் என்ன நடக்கிறதென்பதைக் கேட்டேன். அதற்கு அவர், “குழந்தையின் உடல் வளர்ச்சி முற்றுப் பெற்றிருக்காது. அதனால் ஆத்மா அவ்வுடலினுள் புகாது. என்றார் //
இது புதிதாக இருக்கிறது. ஆனால் நன்கு வளர்ச்சியுற்றும் கூட சில குழந்தைகள் இறந்தே பிறப்பதை (என்ன ஒரு முரணான வார்த்தை!) நாம் பார்த்திருக்கிறோமே…
இப்படி நிறைய நிறைய விஷயங்கள்… அருமையான விளக்கங்கள். உண்மையில் அற்புதமான நூல் இது. மொழிபெயர்ப்பு இலங்கைத் தமிழில் இருந்தாலும் இதற்காக நேரம் ஒதுக்கி மொழி பெயர்த்திருக்கும் (இன்னும் வளருமாம்) ஆனந்தி மகேந்திரன் நன்றிக்குரியவர். இந்த உண்மையைத் தேடி வலைப்பூவைப் படிக்கும் அனைவரையும் இந்தத் தளத்தைப் படிக்க சிபாரிசு செய்கிறேன். பக்கத்தில் இணைப்பும் கொடுத்துள்ளேன். (நண்பர் அண்ணாச்சாமி… இதைப் படித்து விட்டு, ’மூட நம்பிக்கையை வளர்க்கிறேன்’ என்று என்னை மீண்டும் திட்ட மாட்டார் என நம்புகிறேன் )
ஆனந்தி மகேந்திரன் அவர்களால் ஆனந்த கீதம் என்ற தளத்தில் எழுதப்பட்ட அந்தக்கட்டுரை A World Beyond என்ற ஆங்கிலப் புத்தத்தின் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியவர் Ruth Montgomery என்ற பெண். (ரூத் மோன்ட்கோமரி). எழுத அவருக்கு உதவி, ஆவிகள் உலக உண்மைகளையும், இறப்பின் பின்னான நிலையையும் சொன்னவர் Arthur Ford – ஆர்தர் போர்டு.
ரூத் ஆவி மூலம் எழுதிய புத்தகம்
Ruth Montgomeryயின் சுவையான நேர்காணலை இங்கே படியுங்கள்…
இவர் தான் ரூத் மோன்கோமரி
ஆர்தர் போர்ட் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.
ஆவி மனிதர் ஆர்தர் ஃபோர்ட்

மரணத்தின் பின்…. ??? ஏவல், பில்லி, சூனியம் உண்மையா, பொய்யா? – 2


மரணத்தின் பின்…. ???


மரணம் என்பது தவிர்க்க முடியாது. இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த பின் கண்டிப்பாக என்றாவது ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும். சரி அந்த இறப்பிற்குப் பின் என்ன நடக்கிறது, அதுவரை மனித உடலில் அவனது எண்ணங்களாக வாழ்ந்த அந்த உயிர் என்னவாகிறது என்பதைச் சற்று பார்ப்போம்.
மனிதன் இறந்த பிறகு அவனது ஆன்மா மேலுலகம் செல்கிறது. அங்கு அது செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், ஆன்மாவின் பக்குவநிலைக்கேற்பவும் சூட்சும உலகங்களில் வசிக்கிறது. மறுபிறவி எடுத்து தங்கள் கர்மவினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஆன்மாக்கள், அதற்கான காலம் வரும் வரை காத்திருக்கிறது. ஆன்மாவின் தகுதிக்கேற்ப பல்வேறு வளர்ச்சிகளையும் அது பெறுகிறது. இயல்பிலேயே நல்லவர்களாக வாழ்ந்து மறைந்தவர்கள், மீண்டும் மறுபிறவி எடுத்து தங்கள் கர்மக் கணக்கைக் கழிக்க வேண்டியவர்களாக இருந்தால் அவர்கள் மேலும் நல்லவர்களாக அங்கு ஆகிறார்கள்.
அதுபோன்று தாங்கள் செய்த தீவினைகளுக்கு உண்மையாகவே அஞ்சி மனம் வருந்தும் ஆன்மாக்கள் நல்ல பக்குவத்தை அடைகின்றன. இந்தப் பக்குவமானது அவர்களது மறுபிறவிகளின் போதும் தொடர்ந்து அவர்களை நல்வழிப்படுத்துகிறது. அதாவது மறுபிறவியில் இவ்வகை ஆன்மாக்கள் நற்சிந்தனையுடன், நேர்மையான வாழ்க்கை வாழ முனைகிறது. இவர்களின் வாழ்வில் சஞ்சித கர்மாவும், பிராரப்த கர்மாவும் செயலாற்றுகின்றன. இவர்கள் நல்ல மனப் பக்குவம் பெற்று தீவழிகளில் செல்லாததால் ஆகாம்ய கர்மாவினது பாதிப்புகள் அதிகம் நேர்வதில்லை. விளக்கமாகச் சொன்னால் இவர்கள் மனிதர்களின் முற்பிறவி-மறுபிறவிச் சுழற்சியில் அதன் அடுத்த கட்டத்திற்கு பரிணாம வளர்ச்சியுறுகிறார்கள் என்று சொல்லலாம்.
ஆக மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. சரி, அப்படியானால் யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் தோன்றுகிறதல்லவா? சாஸ்திரங்களிலும், கருட புராணம், கடோபநிஷத் போன்றவற்றிலும் கூறப்படும் மறுபிறவி, பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.
பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை.
சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவைன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை.
 
தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும்.
பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ (அதாவது செல்வந்தர் வீட்டு நாய்க்குட்டிகள் போல) வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.
இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன. இதில் முக்கியமான உண்மை என்னவென்றால் பிறவி எடுத்த அனைவரும், அதாவது நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது எனலாம். விஞ்ஞானப் படிப் பார்த்தால் பிரபஞ்ச சக்தி என்ற பரம அணுவிலிருந்து பிரிந்து வந்த அணு என்னும் துகள் மீண்டும் அந்தப் பரம அணுவோடு ஒன்றிணைவதே முக்தி அல்லது வீடு பேறு எனப்படுகிறது.
உயிர்களாகப் பிறந்த நாம் எல்லோரும் என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு பிறவியில் அந்த நிலையை எய்தத் தான் போகிறோம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.


ஏவல், பில்லி, சூனியம் உண்மையா, பொய்யா? – 2


பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பத்தைப் பார்ப்போம்.  சுவாமிகள் சிதம்பரத்தில் தங்கி இருந்த காலம். சைவத்தை சிலர் தூற்றியதால், சுவாமிகளுக்கும் அவர்களுக்கும் பகை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கின் முடிவில் சுவாமிகளே வென்றார். அதனால் வன்மம் கொண்ட பகைவர்கள், சுவாமிகளின் மீது தீவினையை ஏவி விட்டனர். முருகன் அருளால், அந்தத் தீவினை, ஏவி விட்டவனையே சென்று தாக்குமாறுச் செய்தார் சுவாமிகள்.
இதனை,
“……………. தில்லை பின்னை வாழ்
குடில நாமர்கள் கொடிய சூனியம்
ஊட்டி னார் கொலற் கேயஃதுங் கெடுத்
துவகை செற்றுலா மவர்வ ழக்கெலாம்
ஒட்டி யேயெனக் கீந்த வென்றியிவ்
வுலகு கூறுமே யலகில் வேன்முதால்.”
-என்ற அவருடைய ’குமாரசுவாமியம்’ பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கந்தர் சஷ்டிக் கவசத்தில் வரும், “பில்லி சூனியம் பெரும்பகை அகல…” என்று வரும் வரிகளும் இது போன்ற தீச்செயல்கள் மனிதரைப் பாதிக்கும் என்பதை உறுதி செய்கிறது. ஸ்ரீ பாம்பன் சுவாமிகளும் தனது சண்முக கவசத்தில் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ சங்கரர்
சங்கரர், ராமானுஜர் இருவருமே இந்தத் தீய அபிசார மந்திரங்களால் தங்கள் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டனர் என்பதை அவர்களது வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீ சங்கரரிடம் வாதில் தோற்ற அபிநவ குப்தன், அவர் மீது தீவினையை ஏவி விட்டான். அதனால் பலத்த பாதிப்புக்குள்ளானார் ஸ்ரீ சங்கரர். பின்னர் திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானை வணங்கி,  ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் பாடி தன் நோய் நீங்கப் பெற்றார். அது போல சமணர்கள் செய்த துன் மந்திரவாதத்தால் பல சைவர்கள் பாதிக்கப்பட்டதையும் நாம் பெரிய புராணம் வழியாக அறியலாம். அவர்களை தனது இறையாற்றல் மூலம் வென்றார் ஞான சம்பந்தர் என்பதையும் நாம் அறிய முடிகிறது.
ஆக, ஏவல், பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மைதான் என்பதை இவற்றின் மூலம் உணர முடிகிறது. அதே சமயம் ஏவல் வைக்கிறேன், எடுக்கிறேன் என்றெல்லாம் கூறி ஆன்மீகத்தின் பேரில் மக்களை ஏமாற்றும் சாமியார்களிடமிருந்தும் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
காசு ஒன்றையே குறியாகக் கொண்ட இந்தச் சாமியார்கள், போலி ஆன்மீகவாதிகள், மாந்த்ரீகர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள், அதிலிருந்து எப்படித் தப்பிப்பது, ஒருவேளை தனக்கு ஏவல், பில்லி, சூனியம் யாராவது வைத்து விட்டதாகக் கருதினால் அல்லது அப்படி நம்பினால் அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதையெல்லாம் பின்னால் வேறொரு பதிவில் மிக விரிவாகக் கூறுகிறேன்.
எதுவாக இருந்தாலும் உள்ள உறுதியுடன், தன்னம்பிக்கையுடனும், இறை நம்பிக்கையுடனும், உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்தால் எப்பகையையும் வெல்ல முடியும் என்பது உண்மை.
வள்ளுவர்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி
தாழாது உஞற்றுபவர்
என்று குறிப்பிட்டிருப்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
மன உறுதி கொள்வோம்; மன்பதை வெல்வோம்.

ஏவல், பில்லி, சூனியம் உண்மையா, பொய்யா? – 1

கிராமம் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் ஏன் சில அரசியல் தலைவர்களாலும் கூறப்படும் / நம்பப்படும் செய்தி, அவர் எனக்கு ஏவல் வைத்து விட்டார். அதனால்தான் எனக்கு ஆட்சியில் பிரச்னை ஏற்படுகிறது; மோரில் இடு மருந்து வைத்துக் கொடுத்ததால்தான் அந்த அரசியல்வாதியின் உடல் செயலிழந்து விட்டது; என் எதிரி எனக்கு ஏவல் வைத்து விட்டதால்தான் என் மகன் பைத்தியமாகி விட்டான்; மகள் ஓடிப் போய் விட்டாள்; எதிரிகள் சூனியம் வைத்து விட்டார்கள், அதனால்தான் என் நண்பருக்கு தொழில் நஷ்டமாகி விட்டது. – இது போன்ற பல செய்திகளை நாம் கேட்டிருக்க முடியும். நாளிதழ்களிலும் கூட அது பற்றிய செய்திகள், சில இதழ்களில் இந்த மர்ம, மாந்த்ரீகம் பற்றிய விளம்பரங்களைப் பார்க்க முடிகிறது. அது சரி, ஏவல், பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மைதானா? இல்லை. மக்களை ஏமாற்றிப் பிழைக்க சிலர் செய்யும் ஏமாற்று வேலையா? அது பற்றிப் பார்ப்போம்.
சிலர், ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் கட்டுக்கதை. மக்களை ஏமாற்றச் சிலர் செய்யும் தந்திரம் என்பார்கள். அவர்களது கூற்று ஒருவிதத்தில் உண்மையும் கூட. ஆனால் அதற்காக ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் இல்லவே இல்லை என்று நாம் கூறி விட முடியாது.
சிலவகை மந்திரங்களை உச்சாடனம் செய்து உருவேற்றி அதன்மூலம் தங்கள் விரோதிகளுக்கு, அல்லது தாங்கள் விரும்பாதவர்களுக்கு பல பாதிப்புகளை ஒருவரால் ஏற்படுத்த முடியும். அந்த வகை மந்திரங்களுக்கு ’அபிசார மந்திரங்கள்’ என்று பெயர். இவை அதர்வண வேதத்தில் உள்ளன. தமிழிலும் பல ஓலைச்சுவடிகளில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. கேரளாவில் இருக்கும் மாந்த்ரீகர்கள் இவற்றில் தேர்ந்தவர்கள்.
இதுபற்றி, “அதர்வண வேதத்தின் இரண்டாம் பிரிவைச் சார்ந்த மந்திரங்கள் எண்ணிறந்தவை. இவை பெரும்பாலும் பேய் முதலியவற்றை விரட்டி ஓட்டுவன. சில சபிப்பன. சில காதலர்க்கிடையே ஊடல், பிணக்கு முதலியவற்றைத் தோற்றுவிப்பன. சில மனைவியைத் திரும்ப கணவனிடம் சேர்ப்பன. சில உறக்கத்தை உண்டு பண்ணுபவன. சில விருப்பமில்லாத ஆடவனிடத்து அல்லது பெண்ணிடத்துக் காதலைத் தோற்றுவிக்கும் வலிமை உடையன. ஒருவனது படத்தின் துணைக் கொண்டு அவனைத் தன்வயமாக்கவும், அவனுக்குத் தீங்கிழைக்கவும் வல்ல மந்திரங்கள் சில.  …………..  சில பாடல் பெண்ணைக் கருவுறச் செய்யாது தடுப்பதற்கும், ஆடவனை ஆண்மை குன்றியவனாக ஆக்குவதற்கும் ஆற்றல் படைத்தவை. இப்பாடல்கள் எல்லாம் அங்கிரஸர்களுடன் தொடர்புபட்டவை. இதுவரை கூறியவாறு சபிப்பன சில; கெடுப்பன சில; சத்துருக்களையும், மாந்திரீகர்களையும் அழிப்பன சில. இவற்றிற்கு அபிசாராணி என்று இன்னொரு பெயரும் உண்டு.“ என்கிறார் டாக்டர் கா. கைலாசநாதக் குருக்கள், தனது வடமொழி இலக்கிய வரலாறு என்னும் நூலில். (நர்மதா பப்ளிகேஷன்ஸ்)
மந்திரங்கள் என்பவை ஒலி அதிர்வு உடையவை. அவை ஒரு மனிதனின் எண்ண ஆற்றல்களில் மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. தீய மந்திர உச்சாடனங்களால் தீய அதிர்வலைகள் ஏற்பட்டு அவை ஒரு மனிதனைக் குழப்பி தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். இதுதான் ஏவல் எனப்படுகிறது. ஏவல் என்றால் ஏவி விடுதல் என்பது பொருள்.
சூனியம் என்பதற்கு ஒன்றுமில்லாதது என்று பொருள். ஒரு மனிதனின் மனதைக் குழப்பி அவனை ஒன்றுமில்லாமல் ஆக்குவதே, அவனைச் செயல்பட முடியாதபடி முடக்குவதே சூனியம். பில்லி என்பதும் இந்த வகையைச் சேர்ந்ததே.
பொதுவாக மனச்சோர்வு உற்றவர்களும், தன்னம்பிக்கை குறைந்தவர்களும், கர்மவினைப் பாதிப்புகள் அதிகம் உள்ளவருமே இவற்றால் பாதிக்கப்படுகின்றனர். என்றாலும் சிலசமயங்களில் எதிரிகளின் பொறாமை, தீய வன்மம் போன்றவற்றின் காரணமாக, புனிதர்களும், மகான்களும் கூட இவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
சில சம்பவங்களைப் பார்ப்போம்.
அரவிந்தர் ஆசிரமத்தில் ஒருநாள்… புதுச்சேரி வந்த ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் மற்றும் பிற சாதகர்கள் தங்கியிருந்த இல்லத்திலேயே தங்கினார். அதை ஒரு முழுமையான ஆசிரமமாக்கும் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டார். உடன் தத்தா என்ற தோழியும் இருந்தார். இவர்களது வீட்டு வேலைகளைக் கவனிக்க ஓர் வேலையாள் இருந்தான். அவன் ஐரோப்பியப் பெண்கள் தானே என நினைத்து எதிலும் அலட்சியமாக நடந்து கொண்டான். தத்தாவிடம் அடிக்கடி மரியாதைக் குறைவாக நடக்கலானான். யாரையும் மதிக்கவில்லை. தொடர்ந்து பல தவறுகள் செய்து வந்தான். அவனால் அடிக்கடிப் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. பல முறை கண்டித்தும் அவன் திருந்தாததால் அன்னையும் தத்தாவும் அவனை வேலையை விட்டு நீக்கினர்.
ஸ்ரீ அன்னை
பொறாமைக்காரனான அவன் ஒரு மந்திரவாதியை அணுகினான். ஸ்ரீ அன்னை மற்றும் தத்தாவைப் பழிவாங்குவதற்காக தீவினையை ஏவி விட்டான். அது முதல் அடிக்கடி அவர்கள் தங்கி இருந்த அந்த வீட்டில் கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. இது பல நாட்கள் தொடர்ந்தது. யாராலும் காரணம் என்னவென்று அறிய இயலவில்லை. எது செய்தும் தடுக்க முடியவில்லை. சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.
ஒரு நாள் தீவினையின் தொல்லை பொறுக்க முடியாமல் போகவே பொறுமை இழந்த அன்னை அதற்கான மூல காரணத்தைக் கண்டறிய விழைந்தார். தனித்தமர்ந்து ஆழ்நிலை தியானத்தில் மூழ்கினார். தியானத்தின் மூலம் நீக்கப்பட்ட வேலைக்காரன்தான் இவற்றிற்குக் காரணம் என்பது தெரியவந்தது. அவனுக்கு இணைப்புச் சக்தியாக அந்த வீட்டிலுள்ள ஓர் வேலைக்காரச் சிறுவன் இருக்கிறான் என்பதையும் ஸ்ரீ அன்னை கண்டறிந்தார். உடனடியாக அந்தச் சிறுவனை வேறு இடத்திற்கு மாற்றினார். அதுமுதல் அந்தத் தீவினை தொடர முடியாமல் செயலிழந்தது.
ஸ்ரீ அரவிந்தர்
ஆனால் அது ஏவிய அந்த வேலைக்காரனைச் சென்று பாதித்தது. அவன் கை, கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையானான். அதனால் மிகவும் மனம் கலங்கிய அவன் மனைவி ஸ்ரீ அன்னையையும் ஸ்ரீ அரவிந்தரையும் சந்தித்து, அவனது தீச்செயலை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டாள். ஸ்ரீ அரவிந்தரும், ”அவன் ஏதோ ஆத்த்திரத்தில் அறியாமல் செய்து விட்டான். அவனை மன்னிப்போம்” என்றார், ஸ்ரீ அன்னையிடம். அன்னையும் அவனை மன்னித்தார். அதுமுதல் அத்துன்பம் நீங்கி உடல், மனத் தெளிவு பெற்றான் அந்த வேலைக்காரன்ன். ஸ்ரீ அரவிந்தரின் பக்தராகவும் மாறிப் போனான்.
மேற்கண்ட சம்பவம் மூலம் நமக்குத் தெரிவது என்ன? ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் பொய்யல்ல என்பதும், சிலவகை மந்திரங்களை உச்சாடனம் செய்து உருவேற்றி அதன்மூலம் தங்கள் விரோதிகளுக்கு, அல்லது தாங்கள் விரும்பாதவர்களுக்கு பல பாதிப்புகளை ஒருவரால் ஏற்படுத்த முடியும் என்பதும் தெரிய வருகிறதல்லவா?
 Every Action has an Equal and Opposite Reaction என்றார் நியூட்டன். இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். ஒருவருக்கு நாம் தீமை செய்தால் அந்தத் தீவினை நம்மையும் வந்து பாதிக்கும். இதற்கு மேற்கண்ட சம்பவம் சரியான உதாரணம். இதைத் தான் வள்ளுவரும்,
 ” மறந்தும் பிறன் கேடு சூழற்க; சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு”
என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அமானுஷ்யங்கள் பற்றி ஸ்ரீ அன்னை – 1

அமானுஷ்யங்கள் பற்றி ஸ்ரீ அன்னை – 1

ஸ்ரீ அன்னை
கே: நம்மில் எத்தனை பேருக்குக் கடந்த பிறப்புகள் நினைவில் இருக்கின்றன?
 ப: நம் உணர்வின் ஏதாவதொரு பாகத்தில் நம் எல்லோருக்குமே நினைவில் இருக்கும். ஆனால் இது அபாயகரமான விஷயமாகும். ஏனென்றால் சுவையான கற்பனைக் கதைகள் மனித மனத்துக்கு மிகவும் பிடித்தவையாகும்.  மறுபிறப்பு என்னும் உண்மையைப் பற்றி மனித மனம் ஏதாவது கொஞ்சம் தெரிந்து கொண்டு விட்டால் போதும், அது உடனேயே அதைச் சுற்றி அழகிய கதைகளைக் கட்ட விரும்புகிறது. …… இவற்றுக்கும் ஆன்மீக வாழ்விற்கும் சம்பந்தமேதும் இல்லை.

நம் முற்பிறவிகளைப் பற்றிய மெய்யான நினைவு, பூரண ஞானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பது உண்மைதான்.  ஆனால் அது இதுமாதிரியான கற்பனைகளால் வருவதில்லை.

கே: மறுபிறப்பு பற்றி…
 ப: மறுபிறப்பைப் பொருத்தவரை எல்லோருக்கும் பொருந்தக் கூடிய பொது விதி என்று ஏதும் கிடையாது. சிலர் கிட்டத்தட்ட உடனேயே திரும்பப் பிறக்கிறார்கள். தம் குழந்தைகளிடம் மிகவும் பற்றுதல் வைத்துள்ள பெற்றோர்களுக்கு பெரும்பாலும் இப்படி நடக்கிறது. அவர்கள் இறக்கும்போது, அவர்களில் ஒரு பாகம் அவர்களுடைய குழந்தைகளிடம் ஒன்றிக் கொள்கிறது. சிலர் மறுபிறப்பு எடுக்க நூற்றாண்டுகள் அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூடப் பிடிக்கலாம். தமக்குப் பொருத்தமான சூழலை அளிக்கக் கூடிய வாய்புகள் பக்குவமடையும் வரை அவர்கள் காத்திருக்கிறார்கள்.

கே: ஆவிகள், பேய்கள் பற்றிச் சொல்லுங்கள், அவை உண்மைதானா?
 ப: ஆம். அவை சட உலகத்துக்கு அடுத்தாக உள்ள தளத்தில் வசிக்கும் ஜீவன்களாகும். அதைப் பிராண உலகம் என்கிறோம். இந்தப் பிராண உலகம் ஆசைகள், உந்துதல்கள், வெறிகள் மற்றும் வன்முறை, பேராசை, சூது, பற்பல வகையினா அறியாமை போன்றவையெல்லாம் அடங்கிய உலகமாகும். ….. அந்த உலகத்தின் உயிர்களுக்கு சட உலகத்தின் மீது இயல்பாகவே ஒரு விதமான பிடி உண்டு. சட உலகத்தின் மீது அவை நம்முடைய மிகத் தீய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.

மனிதர்கள் இறந்த பிறகு அவர்களுடைய பாகங்களில் சில சட தளத்துக்கு அருகில் உள்ள பிராணச் சூழலில் தொடர்ந்து நீடிக்கின்றன. அந்த எஞ்சிய பாகங்கள் இப்படிப்பட்ட பிராண ஜீவன்களாக ஆவதுண்டு. இறந்த மனிதனின் ஆசைகள், வேட்கைகள் ஆகியவை அவனது உடல் அழிந்த பின்பும் தம் வடிவத்தோடு அங்கே தொடர்ந்து மிதந்து கொண்டிருக்கின்றன. அடிக்கடி அவை தம்மை வெளிப்படுத்தி திருப்தியடைவதற்காகச் செய்லபடுகின்றன. இவ்வாறுதான் ஒருவகையான பிராண லோக ஜீவன்கள் தோன்றுகின்றன. ஆனால் இவை அற்பமானவையாகும். இவற்றைச் சமாளிப்பது முடியாத காரியமல்ல.

ஆனால் ஒருபோதும் மனித வடிவத்தில் இருந்திராத வேறு வகை உயிர்கள் உண்டு; அவை மிக ஆபத்தானவையாகும். அவை பூமியில் மனித உடலினுள் ஒருபோதும் பிறக்காதவையாகும். அப்படி உடலில் பிறந்து சடப்பொருளுக்கு அடிமையாவதை விட, அவை தம் பிராண உலகிலேயே தங்கிக் கொண்டு, அங்கிருந்து பூமியிலுள்ள உயிர்களின் மீது ஆற்றலோடு விஷமத்தனமான ஆட்சி செலுத்துவதையே விரும்புகின்றன.

அவை முதலில் ஒரு மனிதனை தன் கட்டுப்பாட்டின் கீழ் படிப்படியாகக் கொண்டு வருகின்றன. பின்னர் அவனது ஆன்மாவையும், மனித மனத்தையும் வெளியேற்றி அவனை தம்முடைய முழு உடைமை ஆக்கிக் கொள்கின்றன. இந்தப் பேய்கள் புவியிலுள்ள ஒரு மனித உடலைப் பீடித்துக் கொள்ளும்போது அவை மனிதனைப் போலத் தோன்றலாம். ஆனால் அங்கே மனித இயல்பு இருக்காது. ஆகவே இவ்வகைப் பிராண உலக ஜீவர்களோடு தொடர்பு கொள்வது எவ்விதத்திலும் நன்மையைத் தராது.

கே: மரணத்தின் பின்….??
 ப: மனிதன் சட உடலில் பாதுகாப்பாக, சௌகரியமாக இருக்கிறான். உடலே அவனுடைய பாதுகாப்பாகும். சிலர் தம் உடல்களை மிக இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள். மரணத்துக்குப் பின் உடல் இல்லாதபோது எல்லாம் இப்போதை விட நன்றாக இருக்கும், எளிதாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் உடல்தான் உன் புகலிடம். …. சிலர் இந்த உடலில் இருப்பது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது என்கிறார்கள். மரணமே விடுதலையாக இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.

அமானுஷ்யங்கள் பற்றி ஸ்ரீ அன்னை – 2

ஸ்ரீ அன்னை
கே: முற்பிறவிகள் குறித்து…
ப: கடந்த வாழ்வுகளின் நினைவு என்று சொல்லப்படுவது, உள்ளிருந்து அவ்வப்போது தற்செயலாகக் கிடைக்கும் சில குறியீடுகளை வைத்துப் புனையப்படுவதாக அல்லது வேண்டுமென்றே செய்யப்படும் மோசடியாகவே பெரும்பாலும் இருக்கிறது. தம் விலங்கு வாழ்வுகளைக் கூட நினைவில் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் பலர் இருக்கிறார்கள். உலகத்தின் இந்த அல்லது அந்தப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த இப்படிப்பட்ட குரங்காக இருந்ததாக அவர்கள் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் இதில் எதையாவது நிச்சயமாகச் சொல்ல முடியும் என்றால் அது இதுதான். “குரங்குக்கு தன் சைத்திய உணர்வுடன் எந்தத் தொடர்பும் இருக்காது என்பதால் அதன் அனுபவங்களில் இம்மியும் கூட சைத்திய புருஷனால் கிரகிக்கப்படுவதில்லை. அந்த விலங்கு உடல் அழியும்போது, புறக் குரங்கு இயல்பின் பதிவுகளும் அதனுடன் மறைந்து போகின்றன. அவற்றை நினைவில் வைத்திருப்பதாகப் பாசாங்கு செய்வது, இந்தச் சிக்கல்களின் மெய்யான தகவல்களைப் பற்றிய மிக மோசமான அறியாமையைத் தான் காட்டுகிறது.

 கே: இந்த ஜென்மத்தில் செய்ய முடியாதவற்றை மறுஜென்மத்தில் செய்ய இயலுமா?      
அடுத்த ஜென்மம் பற்றிய விசாரணை எல்லாம் சுத்த மடத்தனம். இந்த ஜென்மத்தில் கடைசி மூச்சிருக்கும் வரை இது நமக்களிக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இன்று செய்வதை நாளை செய்யல்லாம் என்று ஒத்திப்போடும் சோம்பலைப் போன்றது தான் இந்த ஜென்மக் கடன்களை அடுத்த ஜென்மத்திற்காய் விட்டு வைப்பது
நாம் இந்தப் பிறவியில் சாதிக்க முடியாததையோ, தன்னைத் தான் வெல்லும் சித்தியையோ மரணத்திற்குப் பின் ஒருவன் .அடையலாம் என நினைப்பது முடியவே முடியாத ஒன்றாகும்.
இம்மண்ணுலக வாழ்க்கையே வளர்ச்சிக்கும், சித்திக்கும் ஆன ஷேத்திரம்.

கே: இறையருள் பற்றி விளக்குங்கள்….
ப: இறையருள் என்பது நீ அடைய வேண்டிய இலக்கை நோக்கி உன்னைச் செலுத்தும் உந்துதல் ஆகும். அதனை வெறும் மனதால் எடை போட முடியாது.
இறையருள் செயலாற்றும் பொழுது, அதன் விளைவு மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது மரணம் போன்றதாகவும் இருக்கலாம். அல்லது விபத்து, இழப்பு போன்றதாக இருக்கலாம். ஆனால் அதன் விளைவு எப்பொழுதும் நல்லதையே மனிதனுக்குத் தரும். ஒருவன் ஆன்மிகப் பாதையில் பாய்ந்து செல்வதற்காக இறைவன் அளிக்கும் அடியாகவோ துன்பமாகவோ ஒருவன் அதனைக் கருத வேண்டும். இறையருள் சித்தியை  நோக்கி மிக விரைவாக ஒருவனை முன்னேறச் செய்வதாகும்.
இறையருளால் விளைவது எதுவாக இருந்தாலும், அது மரணமோ, உயிரிழப்போ, விபத்தோ, எதுவானாலும் இறையருள் செயல்படும் பொழுது கவலைப் படத் தேவையில்லை. ஏனெனில் அது எப்பொழுதும் ஒருவனின்  நன்மைக்காகவே இருக்கும்.
எது நடந்தாலும் அது நன்மைக்கே நடக்கிறது என நினைத்து இறை அருளைப் பூரணமாகச் செயலாற்றும்படி விட்டு விட வேண்டும்.



கே: தெய்வ அருள் செயல்பாடு குறித்து...
ப: ஒரு பொழுதும் தெய்வ சக்திகளை இழுக்க முயலாதீர்கள். முன்னேற வேண்டும் என்ற ஆசையினால், ஆத்மானுபூதி பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் ஒரு பொழுதும் தெய்வத்தை உங்கள் பால் இழுக்க முயலாதீர்கள். இது முக்கியமான ஒன்றாகும். தெய்வ சக்தியை உங்களை நோக்கி இழுக்க முயல்வது உங்களது அகங்காரத்தைக் குறிப்பதாகும்.
முற்றிலுமாக இறைச் சக்தி உங்களுள் நிரம்பும் படி உங்களைத் திறவுங்கள். ஆனால் தெய்வத்தை இழுக்க முற்படவேண்டாம். அது உங்கள் தகுதிக்கும், பற்றற்ற நிலைக்கும் ஏற்பத் தானே நிகழக் கூடியதாகும். உங்கள் ஏற்புத் திறனை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் ஆர்வமுறலாம். அர்ப்பணிக்கலாம். உங்களைத் திறக்கலாம். ஆனால் ஒரு பொழுதும் எடுத்துக் கொள்ள முயற்சிக்காதீர்கள். ஏதாவது தவறாக நடந்து விட்டால் அனைவரும் இறைவனையே குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் தவறுகளுக்குப் பொறுப்பு தெய்வம் அன்று.
மனிதர்களின் பேராசை, தன்னலம், அஞ்ஞானம், பலவீனம், ஏற்பின்மை போன்றவையே!