IELTS: அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வு

IELTS என்பதன் முழுச்சொற்றொடர் International English Language Testing System என்பதாகும். தமிழில் “அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வு" அல்லது "அனைத்துலக ஆங்கில மொழிக்கான தேர்வு முறை” எனப்படும். இதனை ஐஈஎல்டிஎஸ் என்று எழுதினாலும், உச்சரிக்கும் போது “அயெல்ஸ்” என்றே உச்சரிக்கவேண்டும். ஏனெனில் “அயெல்ஸ்” என்பது ஒரு சுருக்கப்பெயர் (Acronym) ஆகும்.
இந்த அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வுமுறையில் இரண்டு வடிவங்கள் உள்ளன.
கல்விசார் வடிவம் (Academic Training)
பொது பயிற்சி வடிவம் (General Training)
இவற்றில் உங்களுக்கு பொருத்தமான தேர்வு வடிவத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
கல்விசார் வடிவம் – (Academic Test)
கல்விசார் வடிவம் ஆங்கில மொழியின் ஊடாக இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புக்கான பல்கலைக் கழகங்களின் நுழைவு அனுமதி, உயர்கல்விக்கான பயிற்சி நெறிகள், கல்வி நிறுவனங்களின் நுழைவு அனுமதி, மருத்துவத்துறைப் போன்ற உயர்பணிகள் போன்றவற்றிற்கானது. அதற்கு பரிட்சையாளர்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகம், அல்லது குறிப்பிட்ட நிறுவனம் கோரும் ஒருங்கு கூட்டு மதிபெண் பெற்றிருக்க வேண்டும்.
தற்போது அமெரிக்காவில் சில பல்கலைக்கழங்களும் அயெல்ஸ் தேர்வு ஒருங்கு கூட்டு மதிப்பெண் அடிப்படையில் ஏற்றுக்கொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொது பயிற்சி வடிவம் (General Training Test)
பொது பயிற்சி வடிவம் ஆங்கிலம் பேசும் நாடுகளில் பொதுவான பணிப் பயிற்சிகள் பெறுவதற்கு, சாதாரணப் பணிகள் போன்றவற்றிற்கு, பாடசாலை அல்லது கல்லூரி போன்றவற்றில் கல்வியை தொடர்வதற்கு, மற்றும் ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கான குடிபுகல் போன்ற காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதுவும் பெறப்படும் ஒருங்கு கூட்டு மதிப்பெண் அடிப்படையிலேயே அனுமதி கிடைக்கும்.
இந்த அயெல்ஸ் தேர்வு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
கேட்டல் (Listening)
வாசித்தல் (Reading)
எழுதுதல் (Writing)
பேசுதல் (Speaking)
தேர்வுக்கு தயாராகும் பரீட்சையாளர்கள் இந்த நான்கு பிரிவு குறித்தும் அறிந்து வைத்துக்கொள்ளல் அவசியம். அநேகமாக பரிட்சைக்கு தோற்றுவோரின் மனதில் எழும் எண்ணங்கள்: "ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வெவ்வளவு நேரம் வழங்கப்படும்? ஒவ்வொரு பிரிவுகளினதும் உற்பிரிவுகள் எத்தனை? உற்பிரிவுகளுக்கு வழங்கப்படும் நேரம் எவ்வளவு? தேர்வுகள் எப்படி நடைப்பெறும்? அவற்றில் என்னென்ன உற்பட்டிருக்கும்?" போன்றவைகளாகவே இருக்கும். உண்மையில் இவற்றை அறிந்துவைத்துக் கொண்டால் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் தம்மை தயார்படுத்திக்கொள்ள எளிதாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டே இந்த ஆக்கம் வழங்கப்படுகிறது.
முழுமையான விபரம் கீழே வங்கப்பட்டுள்ளன.

ஆனால் “வாசித்தல்” மற்றும் “எழுத்துதல்” ஆகிய இரண்டு பிரிவுகளும் கல்விசார் வடிவத்திற்கும் பொது பயிற்சி வடிவத்திற்கும் இடையில் வேறுப்பட்டதாக இருக்கும். அதாவது வாசித்தல், எழுதுதல் ஆகிய இரண்டு பிரிவுகளும் கல்விசார் வடிவத்தில் கடுமையானதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களை கீழே பார்க்கவும்.
கேட்டல் (Listening)
கேட்டல் பிரிவுக்கு வழங்கப்படும் நேரம் 30 நிமிடங்களாகும். இதில் நான்கு பகுதிகளும், அவற்றில் இருந்து 40 கேள்விகளும் உள்ளன. ஒலிப்பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் ஒலிபரப்பப்படும். அவற்றை கவனமாகக் கேட்டு விடையை குறித்துக்கொள்ள வேண்டும். நான்கு கேட்டல் பகுதிகளினதும் முடிவில் “கேட்டல் தேர்வுக்கான விடை தாள்” (Listening Test Answer Sheet) இல் விடையை குறிக்க மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்படும்.
ஒலிப்பதிவு ஒருமுறை மட்டுமே ஒலிக்கப்படும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ளவும்.
வாசித்தல் (Reading)
வாசித்தல் பிரிவுக்கு வழங்கப்படும் நேரம் 60 நிமிடங்கள். இது மூன்று ஏட்டுரை வாசித்தல் பகுதிகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் தோராயமாக 700 - 800 சொற்களைக் கொண்டவைகளாக இருக்கும். மூன்று வாசித்தல் பகுதிகளிலும் இருந்து 40 கேள்விகள் வரும். விடையை, “வாசித்தல் தேர்வுக்கான விடை தாள்” (Reading Test Answer Sheet) இல் குறிக்க வேண்டும். வாசித்தல் தேர்வு பிரிவில் விடையளிப்பதற்கு என்று மேலதிக நேரம் வழங்கப்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். கல்விசார் வடிவத்தில் ஏட்டுரை வாசித்தல் பகுதி கல்விசார் நூல்கள், சஞ்சிகைகள், செய்தித்தாள்கள் போன்றவற்றில் இருந்து பெறப்பட்டவைகளாக இருக்கும். வாசிப்பவர் தான் வாசித்ததை முழுமையாகப் புரிந்துக்கொண்டவராக இருந்தால் தான் கேள்விகளுக்கு சரியான பதிலளிக்க முடியும். பொது பயிற்சி வடிவம் பல்வேறு விளம்பரம், விபரக்கோவை, துண்டுப்பிரசுரங்கள் மற்றும் செய்தித்தாள் போன்றவற்றில் இருந்து வரும்.
எழுதுதல் (Writing)
எழுதுதல் பிரிவுக்கு வழங்கப்படும் நேரம் 60 நிமிடங்கள். இதில் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. முதல் பகுதிக்கு 20 நிமிடங்களும், இரண்டாவது பகுதிக்கு 40 நிமிடங்களும் வழங்கப்படும். கல்விசார் வடிவத்தில் முதல் பிரிவாக 150 சொற்கள் கொண்ட ஒரு அறிக்கை எழுத வேண்டும். அறிக்கை தொடர்பான வரைப்படம், அட்டவணை போன்றவற்றின் ஊடாக விவரிக்கப்பட வேண்டும். பொது பயிற்சி வடிவத்தில் கடிதம் எழுதவேண்டும். இரண்டாவது பகுதி 250 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரை எழுத வேண்டும்.
பேசுதல் (Speaking)
பேசுதல் பிரிவு தோராயமாக 11 முதல் 14 நிமிடங்கள் வரை நடைப்பெறும். இது பரீட்சையாளருக்கும் அயெல்ஸ் தேர்வாளருக்கும் இடையிலான நேர்முகத் தேர்வாக நடைப்பெறும். இதுவும் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி அறிமுகப் பகுதியாகும். பரீட்சையாளர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து தேர்வாளர் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்வதுடன் 4-5 நிமிடங்கள் சில பொதுவான கேள்விகளை கேட்பார். இவை உங்கள் (கல்வி, தொழில், பொழுதுப்போக்கு போன்ற) தனிப்பட்ட விவரங்கள் தொடர்பானதாக இருக்கும். நீங்கள் சுருக்கப் பதில்களாக பதிலளிக்கலாம். அடுத்து ஏதாவது ஒரு பொது நிகழ்வு தொடர்பான ஒரு தலைப்பு அட்டை கொடுக்கப்படும். தயார்படுத்தலுக்கு 1 நிமிடம் அவகாசம் கொடுக்கப்படும். பின் அத்தலைப்பு தொடர்பில் 2 நிமிடங்கள் பேசவேண்டும். கடைசியாக 4-5 நிமிடங்கள் ஒரு கலந்துரையாடல் இடம் பெறும்.
பேசுதல் தேர்வின் போது ஒலிப்பதிவு செய்யப்படும். இந்த ஒலிப்பதிவு தேர்வாளரின் கண்காணிப்பிற்காகவும், சிலவேளை பரிட்சையாளர் தமக்கு கிடைக்கப்பெற்ற ஒருங்கு கூட்டு மதிப்பெண்ணை எதிர்த்து மனுதாக்கல் செய்கையில் அதனை மறுப்பரீசீலனைச் செய்யவும் எடுத்துக்கொள்ளப்படும்.
நான்கு பிரிவுகளும் மொத்தம் 2:44 நிமிடங்களில் முடிவடையும். முதல் மூன்று பிரிவுகளான கேட்டல், வாசித்தல், எழுதுதல் போன்ற மூன்று பிரிவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து இடைவெளி இன்றி நடைப்பெறும். பேசுதல் பிரிவு மட்டும் இடைவெளி விட்டு நடத்தப்படும். அநேகமாக குறிபிட்ட அதே நாளிலேயும் நடைப்பெறலாம். அல்லது ஏழு நாட்களுக்கு முன்பாக அல்லது பின்பாகவும் நடைப்பெறலாம். தேர்வு முடிவடைந்து 13 நாட்களின் பின்னர் தேர்வின் பெறுபேறுகளை நீங்கள் பெறக்கூடியதாக இருக்கும்.
ஒருங்கு கூட்டு மதிப்பீடு
-------------------------------------------------------------------------------------
இந்தத் தேர்வில் வெற்றி (pass) தோழ்வி (fail) இல்லை. 1 முதல் 9 வரையான ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் ஒருவரின் ஆங்கில மொழிக்கான திறனை மதிப்பீடு செய்யப்படுகின்றது. ஆகக்கூடிய ஒருங்கு கூட்டு மதிப்பெண்ணாக 9 வழங்கப்படுகின்றது. 9 மதிப்பெண்களைப் பெற்றவர், முழுமையான ஆங்கில மொழி ஆளுமை மிக்கவர் (தேர்ந்த பயனர்/வல்லுநர்) என்றும், 1 எடுத்தவர் ஒருசில சொற்களை தவிர ஆங்கில மொழியை பயன்படுத்தும் திறன் முற்றிலும் அற்றவர் என்றும் மதிப்பிடப்படுகின்றது. மேலும் அட்டவணையில் பார்க்கவும்.

ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் ஒருவரின் ஆங்கில மொழிக்கானத் திறனை எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகின்றது என்பதனை கீழே பார்க்கவும்.
9 = Expert User (தேர்ந்த பயனர்/வல்லுநர்)
இவர் ஆங்கில மொழியில் முழுமையான ஆளுமைப் பெற்றவர். ஆங்கில மொழியில் எதனையும் எளிதாகவும் துல்லியமாகவும் விளங்கிக்கொள்ளும், பயன்படுத்தும் முழுமைத் திறன் பெற்றவராவார்.
8 = Very Good User (மிகச் சிறந்த பயனர்)
ஆங்கில மொழியில் ஆளுமை உள்ளவர். ஆனால் மிகத்துல்லியாமான ஆளுமை இல்லை. சிற்சிறு தவறுகள் ஏற்படுகின்றன. தமக்கு பரீட்சையம் இல்லாத விடயங்களில் தவறுதலாக புரிந்துக்கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் ஆங்கில மொழியில் சிக்கலான விவாதங்களை புரிந்து கையாளும் திறன் பெற்றவர்.
7 = Good User (சிறந்த பயனர்)
ஆங்கில மொழியில் ஆளுமை உண்டு. ஆனால் அவ்வப்போது துல்லியமல்லாத, பொருத்தமற்ற பயன்பாடுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தவறாகப் புரிந்து கொள்ளுதல் போன்றவை ஏற்படுகின்றன. இருப்பினும் பொதுவாக சிக்கலான மொழிப் பயன்பாட்டை கையாளக்கூடியவர். விவாதங்களைப் புரிந்து கொள்ளக் கூடியவர்.
6 = Competent User (திறனான பயனர்)
ஆங்கில மொழியில் பொதுவான ஒரு ஆளுமை உண்டு. இருப்பினும் சில துல்லியமற்ற பயன்பாடுகள், பொருத்தமற்ற பயன்பாடுகள், தவறாக புரிந்துக்கொள்ளல் போன்றன உள்ளன. தமக்கு பரீட்சையாமான சூழல்களில் சிக்கலான மொழிப்பயன்பாட்டை புரிந்துக்கொள்ளும், பயன்படுத்தும் திறன் உண்டு.
5 = Modest User (அளவான பயனர்)
ஆங்கில மொழி ஆளுமை ஓரளவு உண்டு. தவறுகள் பல ஏற்படுகின்றன. ஆனால் பல சந்தர்ப்பங்களில் பொருளை மேலோட்டாமாக புரிந்துக்கொள்ளும் திறன் உண்டு. தமது துறையில் அடிப்படையான தொடர்புகளை கையாளக்கூடியவர்.
4 = Limited User (குறைந்த அளவான பயனர்)
பழக்கமான சூழல்களுக்கான அடிப்படை மொழி திறன் உண்டு. புரிந்துக்கொள்வதிலும், தமது கருத்தை வெளிப்படுத்துவதிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சிக்கலான மொழியமைப்பை பயன்படுத்த முடியாதவர்.
3 = Extremely Limited User (மிகக் குறைந்த அளவிளான பயனர்)
மிகவும் பரீட்சையமான சூழல்களில் மட்டும் பொதுவான பொருளை புரிந்துக்கொள்ளக் கூடியவர். தொடர்பாடல்களின் போது அடிக்கடி இடைமுறிவு ஏற்படுகின்றது.
2 = Intermittent User (அவ்வப்போது பயன்படுத்தும் பயனர்)
மிகவும் அடிப்படையான ஒரு சில சொற்களை தமக்கு பழக்கப்பட்ட சூழல்களில் பயன்படுத்துவதைத் தவிர, ஆங்கில மொழியில் தொடர்பாடல்கள் எதனையும் மேற்கொள்ளல் இவருக்கு சாத்தியமில்லை. ஆங்கில மொழியில் பேசுதல், எழுதுதல், புரிந்துக்கொள்ளல் போன்றவற்றில் மிகவும் கடினப்படுபவர்.
1 = Non-User (பயன்படுத்தாதவர்)
அடிப்படையில் ஆங்கில மொழியை பயன்படுத்தும் திறன் அற்றவர். ஒருசில ஒற்றைச் சொற்கள் மட்டும் தெரியும்.
0 = No Attempt (பரீட்சையை மேற்கொள்ளவில்லை)
மதிப்பீடு செய்யும் அளவில் தகவல்கள் அளிக்கப்படவில்லை.
இந்த அயெல்ஸ் தேர்வுக்கு தோற்றவிரும்புபவர்கள், தாம் வாழும் நாட்டில், தமக்கு அன்மித்த நகரில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாதமும் நான்கு அல்லது ஐந்து தேர்வுகள் நடாத்தப்படுகின்றன. தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தினை பரிட்சையாளர் தனக்கு அன்மித்த அயெல்ஸ் தேர்வு மையத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது நேரடியாக கீழே பதிவிறக்கிக்கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் PDF
அதிகாரப்பூர்வத் தளம்: http://www.ielts.org/
அயெல்ஸ் தேர்வுக்கு தயார் செய்துக் கொண்டிருப்போருக்கு இத்தகவல்கள் நிச்சயம் உதவியாக இருக்கும். இன்னும் இப்படி ஒரு தேர்வு இருப்பதே தெரியாதவர்களும் நம்மில் இருப்பர். அவர்களுக்கும் இத்தகவலை கொண்டுச்செல்லுங்கள். எல்லோரும் பயனடையட்டும்.
இந்த அயெல்ஸ் தேர்வுக்கு தோற்றவிரும்புவோர் என்ன மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்ளலாம் எனும் அலோசனைக் குறிப்புகளை அடுத்தப்பதிவில் பார்ப்போம்.
இந்த அயெல்ஸ் தேர்வு தொடர்பான கேள்விகளை கேட்கவிரும்புவோர் இப்பதிவில் பின்னூட்டாமாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்கலாம்.
No comments:
Post a Comment