Thursday, 19 April 2012

தேர்வு தோல்வி பயத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி தூக்குபோட்டு தற்கொலை


சென்னை, ஏப்.18-

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. சிவில் என்ஜினீயரிங் தமிழ் வழியில் படித்தவர் எஸ்.தைரியலட்சுமி (வயது 18). முதலாம் ஆண்டு மாணவியான தைரியலட்சுமியின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் மடப்பட்டு அருகே உள்ள கருவேப்பிலை பாளையம்.

விவசாய குடும்பத்தை சேர்ந்த தைரியலட்சுமியின் தாய் இறந்துவிட்டார். தந்தை சக்திவேல் மற்றும் ஒரு தங்கை உள்ளனர். மாணவி தைரியலட்சுமி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். அவருடன் 6 மாணவிகள் தங்கி இருந்தனர்.

நேற்று காலையில் 8.30 மணிக்கு வகுப்புக்கு தைரியலட்சுமி சென்றுள்ளார். 2 வகுப்புகள் முடியும் வரை இருந்துள்ளார். காலை 10.30 மணிக்கு இடைவெளி விட்டபோது அவர் தனது அறைக்கு சென்று இருக்கிறார். அறைக்கு முன்பக்கம் மட்டுமின்றி பின்பக்கமும் கதவுகள் உள்ளன.

தற்செயலாக அந்த அறையில் தங்கி இருந்த மாணவி ஒருவர் அறைக்கு சென்றிருக்கிறார். அப்போது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தால் பின்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி தைரியலட்சுமி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதை பார்த்து அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து அலறினார்.

பின்னர் அருகில் உள்ள ஆயாவிடம் சென்று பதைபதைக்க தகவலை தெரிவித்தார். அந்த ஆயா இதுகுறித்து வார்டனிடம் தெரிவித்தார். பின்னர் துணைவேந்தர் மன்னர் ஜவகர், கல்லூரி டீன் சேகர் ஆகியோர் தைரியலட்சுமி தூக்குபோட்ட அறைக்கு விரைந்து சென்று பார்த்தனர்.

மாணவி இறந்து விட்டதை அறிந்த அவர்கள் உடனே இது குறித்து கோட்டூர்புரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மாணவி தற்கொலை செய்து கொள்ளும் முன்பு உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

என்னால எதுவும் சரியாக செய்ய முடியலை. நல்லா படிக்க முடியலை. நிறைய பாடத்தில் பெயிலாகி உள்ளேன். ரொம்ப கஷ்டப்பட்டு எங்க வீட்டில் என்னை படிக்க வைக்கிறாங்க. அதற்கு ஏற்றபடி என்னால் படிக்க முடியலை. 2-வது செமஸ்டரிலும் பெயிலாகிவிடுவேன் என்று பயமாக உள்ளது.

ஆசிரியர்கள் நன்றாகத்தான் சொல்லித்தருகிறார்கள். யாரும் தப்பா நினைக்காதீர்கள். நான் போகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தைரியலட்சுமி எழுதி உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளில் ஏழை மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு செலுத்தவேண்டிய பணத்தை மாணவர்களே பணம் திரட்டி செலுத்தி வருகிறார்கள்.

இதற்காக துளிர் என்ற அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பில் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட மாணவர் மணிவண்ணன் இருந்தார். தைரியலட்சுமி, மாணவர் மணிவண்ணனிடம் தனக்கு பணம் செலுத்துவதற்காக உதவி கோரினார். ஆனால் அதற்கான பணத்தை கொடுப்பதற்குள் மணிவண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் 24 பாடங்களில் பெயில் ஆகிவிட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

தைரியலட்சுமியும், இறந்த மாணவர் மணிவண்ணனும் காதலர்கள் என்றும் மணிவண்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்த அன்று மட்டும் 40 முறை மணிவண்ணன் செல்போனுக்கு தைரியலட்சுமி போன் செய்தார் என்றும் மாணவர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

ஆனால் இது உண்மையா? பொய்யா? என்று உறுதிப்படுத்த முடியவில்லை. தைரியலட்சுமியுடன் தங்கி இருந்த மாணவிகள் கூறியதாவது:-

தைரியலட்சுமி எப்போதும் தனிமையில்தான் இருப்பார். எங்களுடன் கலகலப்பாக பேசமாட்டார். விரக்தியாக இருப்பார். தாழ்வுமனப்பான்மையுடன் காணப்படுவார். வருகிற செமஸ்டர் தேர்வில் பெயிலாகி விடுவோம் என்று பயந்து கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவு தைரியம் ஊட்டினாலும் அவர் தைரியமாக இல்லை. அவரது முடிவு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சில மாணவர்கள் கூறுகையில், பெயரில் தைரியம் உள்ளவர் வாழ்க்கையில் தைரியம் இல்லாமல் போய்விட்டாரே என்றனர். இந்த வருடம் மட்டும் தமிழ்நாட்டில் 84 மாணவ-மாணவிகள் காதல் தோல்வி மற்றும் படிக்க முடியவில்லை என்று கூறி தற்கொலை செய்துள்ளனர்.

இந்த வருடம் சென்னை ஐ.ஐ.டி.யில் 3 மாணவர்கள் பாடங்களில் பெயிலானதால் தற்கொலை செய்துள்ளனர். கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி டீன் சேகர் கூறுகையில், மாணவர்கள் பெயிலானால் கவலைப்படவேண்டாம். மனம் உடையதேவையில்லை. பெயிலான பாடங்களை எழுதி மீண்டும் தேர்ச்சி பெற முடியும். இதை எத்தனை முறையோ சொல்லி இருக்கிறேன். அதையும் மீறி இப்படி நடந்து விட்டது என்றார்.

No comments:

Post a Comment