Tuesday, 10 April 2012

மகாபாரதம் பகுதி-20



துரியோதனனுக்கு கடும் அதிர்ச்சி. இவனுக்கு விஷம் கொடுத்தோம். சாகாவிட்டாலும் பரவாயில்லை. விஷம் தாக்கி கருப்பாகவாவது மாறியிருக்கிறானா? சூரியனைப் போல் செக்கச்செவேலென மின்னுகிறானே! இவன் எப்படி பிழைத்திருக்க முடியும்? என்ன நடந்தது... அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படி சகோதரர்களுக்கு இடையே பனிப்போர் நடந்து கொண்டிருக்க, தன் பேரக் குழந்தைகளுக்கு வித்தை கற்றுக் கொடுக்க ஆசாரியர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார் தாத்தா பீஷ்மர். கிருபாச்சாரியார் என்பவர் அரண்மனையில் ஏற்கனவே குருவாக இருந்தார். இவர் சாதாரணப்பட்டவர் அல்ல. தவத்தில் சிறந்த கவுதம முனிவரின் பேரன். இவரது தந்தையின் பெயர் சரத்துவான். சிறந்த வில்வித்தையாளர். இவரிடம் 105 பேரும் வில்வித்தையை சரளமாகக் கற்றனர். இன்னும் மற்போர், போரில் வியூகம் அமைக்கும் முறை என பல கலைகளையும் கற்றுத்தந்தார் கிருபர். கிருபாச்சாரியாருக்கு ஒரு தங்கை உண்டு. பெயர் கிருபி. இவரைத் துரோணர் என்னும் பெரும் வில்வித்தையாளருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். துரோணர் ஆங்கிரஸ முனிவரின் குலத்தில் தோன்றியவர். ஆங்கிரஸரின் வம்சாவளியில் வந்த பரத்துவாஜ முனிவர், ஒருமுறை கங்கா தீரத்தில் நீராடிக் கொண்டிருந்த போது, தேவகன்னிகையான மேனகையைக் கண்டார். அவளைப் பார்த்தவுடனேயே தவம் மறந்து உடலில் கிளர்ச்சி ஏற்பட்டது. தன் மோகத்தை ஒரு கலசத்தில் செலுத்தினார். அந்த கலசத்தில் இருந்து ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையே துரோணர். ரிஷிகளுக்கு அக்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சக்தி இருந்திருக்கிறது.
துரோணரின் இளமைக்கால வரலாறை இந்த இடத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கிவேச முனிவர் என்பவரிடம் பரத்வாஜர் தன் இளம் மகன் துரோணனை பாடம் கற்க அனுப்பி வைத்தார். அங்கிவேசரின் குருகுலத்தில் தங்கிப் படித்த போது துரோணனுக்கு ஒரு நண்பன் கிடைத்தான். அவன் பாஞ்சால தேசத்து அரசன் பிருஷதனின் மகன். பெயர் யாகசேனன். இவனை துருபதன் என்று பட்டப்பெயரிட்டு அழைப்பார்கள். அப்பெயரே அவனுக்கு கடைசி வரை நிலைத்தது. நட்பென்றால் அப்படி ஒரு நட்பு. நகமும் சதையும் போல் பிரியாமல் இருவரும் சுற்றித்திரிவார்கள் இந்த சிறுவர்கள். குருகுல படிப்பு முடிந்து அவரவர் இடத்திற்கு திரும்பும்நாளில் நண்பர்கள் இருவரும் மிகவும் வருத்தப்பட்டனர். துருபதன் தன் நண்பன் துரோணனை அணைத்தபடி, துரோணா, நீ எப்போது வேண்டுமானாலும் என்னைப் பார்க்க பாஞ்சால தேசத்திற்கு (இன்றைய பஞ்சாப்)வரலாம். என் தந்தையின் ஆட்சிக்காலத்திற்கு பிறகு நான் அரசன் ஆவேன். அப்போது, என் நாட்டில் பாதியை உனக்குத்தந்து உன்னையும் அரசனாக்குவேன். இது சத்தியம், என்றான். நண்பனின் உபசார வார்த்தைகள் கேட்டு துரோணன் நெகிழந்து போனான். இப்படியாக காலம் கழிந்து விட்டது. கிருபி துரோணருக்கு மனைவியானாள். அவர்களுக்கு சிவபெருமானின் பேரருளால் அஸ்வாத்தாமன் என்ற மகன் பிறந்தான். பிறந்தது கடவுளின் அருளால் என்றாலும் கூட, பிராமணரான துரோணரால் மகனை வளர்க்கும் அளவுக்கு சம்பாதிக்க இயலவில்லை. தவம், யாகம், பூஜை என சுற்றிக் கொண்டிருந்த அவர், பாலுக்காக ஏங்கியழும் மகனைக் கண்டு வருத்தப்படுவார். கிருபி அதை விட நூறு மடங்கு வருந்துவாள். ஐந்து வயது வரை அந்தக் குழந்தை எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை.
ஒருநாள் நண்பன் துருபதனின் ஞாபகம் துரோணருக்கு வந்தது. இளம்வயதில் அவன் செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வரவே, பாஞ்சால தேசம் நோக்கி புறப்பட்டார் அவர். இப்போது துருபதன் பாஞ்சால தேசத்தின் மன்னனாக இருந்தான். நண்பனிடம் நாடு கேட்பதற்காக அவர் போகவில்லை. ஒரு பசுவை வாங்கி வந்தால், குழந்தை பசித்து அழும்போது பாலாவது கொடுக்கலாமே என்ற எண்ணத்துடன் புறப்பட்டார். அரண்மனைக்குச் சென்று துருபதனைச் சந்தித்தார். நீண்ட காலத்திற்கு பிறகு பார்க்க வருவதால், நண்பன் ஓடோடி வந்து அணைத்துக் கொள்வான் என நம்பிச் சென்றார் துரோணர். அரண்மனைக்குள் சென்றதும், துருபதன் அவரைப் பார்த்தான். அவன் கேட்ட முதல் கேள்வியே துரோணரின் நெஞ்சில் அம்பாய்ப் பாய்ந்தது.  அந்தக் கேள்வி என்ன தெரியுமா? நீ யார்? என்பது தான். நீண்ட நாளாகி விட்டதால் அவன் தன்னை மறந்திருப்பானோ என்று, நண்பா! நான் துரோணன்... என்று இழுக்கவே, எந்த துரோணன்? என்று துருபதன் பதில் கேள்வி கேட்கவும் நொந்து நைந்து விட்டார் துரோணர். அப்போது ஜாதி துவேஷத்தைக் கிளப்பினான் துருபதன். நீ ஜாதியில் பிராமணன் என்பது உன்னைப் பார்த்ததுமே தெரிகிறது. நான் க்ஷத்திரியன். உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? என்றான். இதன் மூலம் தான் ஒரு மன்னன் என்றும், துரோணர் ஏழை அந்தணன் என்றும் குத்திக்காட்டினான். அடுத்து அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பரிகாசச் சொல்லாய் அமைந்தது. கேவலம் பசி தீர்க்க இவனிடம் உதவி கேட்க வரப்போய் நிலைமை இப்படியாகி விட்டதே! துரோணரின் உடல் கூனிக்குறுகியது. அதுவே ஆவேசமாக பொங்கி எழ, அட நம்பிக்கைத் துரோகியே! நீ எனக்கு இளம்வயதில் நாடு தருவதாகச் சொன்னாய். நான் ஒரு பசுவை யாசகமாக கேட்க வந்தேன். என் ஏழ்மையை பரிகசித்தாய். இப்போது சொல்கிறேன் கேள். நான் உன் நாட்டில் பாதியை நீ சொன்னபடி நிச்சயமாக அடைவேன். உன்னுடன் போர் செய்வேன். உன்னைத் தோற்கடித்து தேர்க்காலில் கட்டி தெருத்தெருவாக இழுத்துச் செல்வேன். இது சத்தியம், என்று சபதம் செய்தார். அப்போது பல நாட்டு அரசர்கள் அவையில் இருந்தனர். துரோணரின் கர்ஜனை அவர்களை அசர வைத்தது. துருபதனின் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து வேகமாக வெளியேறி விட்டார்.

No comments:

Post a Comment