Tuesday, 10 April 2012

மகாபாரதம் பகுதி-14


temple

பெற்ற மகனைப் பார்த்து உள்ளம் பூரித்த அதே வேளையில், குந்திக்கு பயமும் வந்து விட்டது. ஐயோ! தந்தையாருக்கு இது தெரிந்தால் என்னாகும்? குடும்ப மானம் காற்றில் பறக்குமே. சூரியனுக்கு இந்த பிள்ளையைப் பெற்றேன் என்றாலும் கூட, கன்னியாக இருந்து கொண்டே காமலீலை நடத்தினாயடி, கள்ளி, என்று தகப்பனார் திட்டுவார். ஊரார் என்ன சொல்வார்கள்? அட காமந்தகாரி, மனஅடக்கம் இல்லாத நீயா எங்கள் இளவரசி என்று வசை பாடுவார்களே, ஓ என்ன செய்வது? அப்போது அவளது அந்தரங்கத் தோழி வந்தாள். நடந்த விஷயங்கள் அனைத்தும் அவளுக்குத் தெரியும். அவளிடம், என் அன்புத் தோழியே! பெண்கள் ரகசியங்களைப் புதைக்கத் தெரியாதவர்கள் என்பார்கள். ஆனால், நீ அப்படிப்பட்டவள் அல்ல. என் நலத்தை மட்டுமே நாடுபவள். இந்த அந்தரங்கத்தை வெளியே சொல்லமாட்டாய் என நான் அறிவேன். நான் மீண்டும் கன்னியாகி விட்டேன். இப்போது இவன் என் குழந்தையல்ல. இவன் தெய்வத்தின் குழந்தை. இவனை இதோ இந்த பாகீரதி (கங்கை) ஆற்றில் விட்டு விடு. ஒரு பெட்டிக்குள் வைத்து விட்டால் ஆபத்தின்றி தப்புவான். யாராவது இவனைக் காப்பாற்றி விடுவார்கள் என நம்புகிறேன், என்றாள். தோழி குந்தியின் நிலையைப் புரிந்து கொண்டாள். இளவரசி! விளையாட்டு வினையாகி விட்டதை நானும் உணர்வேன். உன் நிலையில் நான் இருந்தாலும் இதையே தான் செய்திருப்பேன். என் உயிர் உள்ளவரை இந்த ரகசியம் வெளியே வராது. கவலைப்படாதே, என ஆறுதல் சொல்லி, சித்திரவேலைப்பாடுள்ள ஒரு அழகிய பெட்டியில் குழந்தையை வைத்தாள். குந்தி அன்று அழுது பெருக்கிய கண்ணீரின் அளவு கங்கையையும் தாண்டியது.
அந்த அழகு மகனை அவள் கங்காதேவியிடம் தாரை வார்த்தாள். புனித கங்காமாதா அந்தப் பெட்டியை மிக பத்திரமாக சுமந்து சென்றாள். ஏனெனில், பெட்டிக்குள் இருப்பவன் சூரிய மைந்தன். இந்த தேச மக்கள் சுபிட்சமாக வாழ கேட்டதையெல்லாம் கொடுக்கும் வள்ளலாகப் போகிறவன். அலைபுரண்டு ஓடினாலும், சுழல்களுக்குள் சிக்கினாலும் பெட்டி எந்த சேதாரமும் இல்லாமல் சென்றது. நீண்ட தூரம் சென்ற பிறகு ஓரிடத்தில் அதிரதன் என்பவன் தன் மனைவியுடன் புரண்டோடும் பாகீரதி நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அந்நாட்டு தேர்ப்பாகன்களின் தலைவன். அதிரதனின் மனைவி தூரத்தில் ஒரு பெட்டி மிதந்து வருவதைக் கணவனிடம் சுட்டிக்காட்டினாள். வெள்ளமென்றும் பாராமல், நதியில் குதித்து அதை தள்ளிக் கொண்டே வந்து கரைசேர்த்தான் அதிரதன். அதிரதனின் மனைவி அவசரமாக பெட்டியைத் திறந்தாள். உள்ளே குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. அவனது முகப்பிரகாசத்தை ரசிப்பதா? அல்லது உலகில் எங்கும் இல்லாத அதிசயமாக காதில் குண்டலமும், மார்பில் கவசமும் பளபளத்ததை ரசிப்பதா? இது என்ன ஆச்சரியம்? இவ்வளவு அதிசயமும், அழகும் கொண்ட குழந்தையைப் பெற்றவள் ஏன் தண்ணீரில் மிதக்க விட்டாள்? அவள் ஒரு பெண்தானா? என்றெல்லாம் பலவாறாகப் பேசியபடி குழந்தையை எடுத்து அள்ளி அணைத்தாள் அந்த மாதரசி. இருக்காதா பின்னே! அவர்களுக்கு கடவுள் குழந்தை செல்வத்தை தரவில்லை. மரணத்துக்கு பிறகு பிதுர்க்கடன் செய்ய இதோ ஒரு மகன் வந்து விட்டான். அவர்கள் ஆனந்தப்பட்டனர். குழந்தையையும் பெட்டியையும் எடுத்துக் கொண்டு இல்லம் போய் சேர்ந்தனர்.
குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசித்தனர். குழந்தையின் கைகள் அடிக்கடி மூடித்திறந்ததைப் பார்த்து, ஓ இவன் வள்ளல். கொடுக்கும் குணமுடையவன். இவனுக்கு கர்ணன் என பெயர் சூட்டுவோம், என முடிவெடுத்தனர். அரசகுலத்தில் பஞ்சு மெத்தையில் அயர்ந்துறங்க வேண்டிய அந்தக் குழந்தை ஒரு ஏழை வீட்டு மரத்தொட்டிலில் படுத்திருந்தான். இங்கே இப்படியிருக்க, இது எதையும் அறியாத குந்தியின் தந்தை விராதன் குந்திக்கு திருமண சுயம்வர ஏற்பாடு செய்தான். பல நாட்டு மன்னர்களும் வந்திருந்தனர். வந்தவர்களில் பாண்டுவும் ஒருவன். அவனை
குந்திக்கு பிடித்து போய் விட்டது. மணமாலையை அவனுக்கே அளித்தாள். திருமணம் சிறப்பாக நடந்தது. குந்தியும், பாண்டுவும் இன்பமாய் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் மன்னர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. பாண்டுவின் பெருமையைக் கேள்விப்பட்டான் மந்திர தேசத்து மன்னன் ருதாயன். அவனுக்கு மாத்ரி என்ற மகள் இருந்தாள். அவளையும் பாண்டுவுக்கு திருமணம் செய்து வைத்தான். மாத்ரியின் சகோதரன் சல்லியனுக்கும் இந்த திருமணத்தில் பெரும் விருப்பம் இருந்தது. தங்கைக்கு நல்ல கணவன் கிடைத்தது கண்டு மகிழ்ந்தான். இந்த ஆண்வர்க்கம் இருக்கிறதே... அதனிடம் ஒரு பலவீனம் உண்டு. பெண்கள் முன்னால் தங்கள் வீரத்தைக் காட்ட வேண்டும் என்றால் விழுந்து விழுந்து காட்டுவார்கள். கிருதயுகம் முதல் கலியுகம் வரை இது இருக்கத்தான் செய்கிறது. பாண்டு மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? புதுமனைவியர் இருவரையும் அழைத்துக் கொண்டு அவன் காட்டுக்கு போனான். மனைவிகளை அருகில் வைத்துக் கொண்டு, இதோ பார் புலி, அதைக் கொல்கிறேன், என்று சொல்லி அம்பெய்தி புலியைக் கொன்றான். யானைகளைப் பிடித்தான். சிங்கங்களை அழித்தான். யாழிகள் என்ற இனம் அக்காலத்தில் இருந்தது. சிங்கமுகமும், தும்பிக்கையும் கொண்ட இந்த அதிசய மிருகங்களையும் கொன்றான். இதையெல்லாம் பார்த்த, புதுமனைவியர் தங்கள் கணவனின் வீரம் கண்டு அகம் மகிழ்ந்தனர். ஓரிடத்தில் இரண்டு மான்கள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன. குந்தி, மாத்ரி, பாருங்கள். அந்த மான்களை இங்கிருந்தே அடிக்கிறேன், என்றான். தூரத்தில் அந்த இரண்டு மான்களும் தங்களுக்கு எமனாக வரும் அம்பைப் பற்றி அறியாமல் இன்ப சுகத்தில் மூழ்கியிருந்தன. ஆனால், அந்த அம்பு பாண்டுவுக்கும் சேர்த்து எமனாகப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது என்பதை அவனும், அவனது தேவியரும் அப்போது உணரவில்லை.

No comments:

Post a Comment