பாபாவின் அவதார ரகசியம்
இறை அவதாரங்கள் ஏன் நிகழ்கின்றன?.
புவியில் பல மாற்றங்களை ஏற்படுத்தவும், மானுட குலத்தைச் சீர்திருத்தி
உயர்த்தவும். அப்படித்தான் இயேசு முதல் மிக அண்மைய ஞானி யோகி ராம்
சுரத்குமார் வரையிலான அவதார புருடர்களை, தன் சார்பாக, பிரதிநிதிகளாக
புவிக்கு அனுப்பி வைக்கிறான் பரம் பொருளாகவும், பரமபிதாவாகவும் விளங்கும்
இறைவன். சிலசமயம் மனித குலம் காக்க மகான்களே வலிந்து உலகில் பிறந்து மக்கள்
குறைகள் தீர்ப்பதுமுண்டு
சுவாமி விவேகானந்தர் மிகப் பெரிய ரிஷி
ஒருவரின் அவதாரம் என்றிருக்கிறார் பகவான் ராமகிருஷ்ணர். ராமனாகவும்,
கிருஷ்ணனாகவும் வந்தவன் எவனோ, அவனே ராமகிருஷ்ணனாக வந்திருப்பதாகவும் தன்
சீடர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நான் பலகாலம் கழித்து மீண்டும்
பிறப்பேன் என்றும் சீடர்களிடம் அவர் உறுதி கூறியிருக்கிறார்
அகில உலகம் காக்கும் பராசக்தியே ஸ்ரீ
அன்னை உருவில் தோன்றியுள்ளதாக சாதகர்களிடம் கூறியிருக்கிறார் யோகி
அரவிந்தர். ஒவ்வொரு யுகத்திலும் ஸ்ரீ அரவிந்தர் பல்வேறு ரூபங்களில் தோன்றி
இந்த உலகம் உய்ய உழைத்திருக்கிறார் என்று கூறுகிறார் ஸ்ரீ அன்னை.
பாபாவின் அவதார ரகசியம் என்ன?
யோகி ஸ்ரீ அரவிந்தர், அலிப்பூர் சிறையில்
அடைபட்டிருந்த சமயம். அங்கே ஒரு நாள் தியானத்தின் போது பகவான் கிருஷ்ணரின்
காட்சியும், விவேகானந்தரின் தரிசனமும் கிடைக்கப் பெற்றார். அவர்களது
அறிவுரையையும் பெற்றார். அதுமுதல் தான் தீவிரமாக இருந்த சுதந்திரப்
போராட்டத்திலிருந்து விலகி, யோக வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார்.
புதுச்சேரிக்குச் சென்றவர் அங்கே தனித்திருந்து தியான வாழ்வைத் தொடர
ஆரம்பித்தார்.
மானிடன் அதி மானிட நிலைக்கு உயர வேண்டு
என்று பாடுபட்ட அவர். தெய்வீக சக்தி புவிக்கு இறங்கி வரவேண்டும் என்று அதி
தீவிரமாக உழைத்தார். ஸ்ரீ அரவிந்தர் 1926ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தனது பிறந்த
நாள் அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். தன் யோக சாதனையில் கடந்த ஆண்டு வரை
இருந்த தடைகள் முற்றிலுமாய் விலகி விட்டன என்றும், இனி விரைவில் பல
மகத்தான செயல்கள் நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்
அதே ஆண்டு நவம்பர் 24 அன்று சாதகர்கள்
அனைவரும் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் முன் அமர்ந்து தியானத்தில் மூழ்கினர்.
சற்று நேரத்தில் ஒரு மிகப் பெரிய பேரொளி மேலிருந்து கீழே இறங்கி வருவதை
அனைவரும் உணர்ந்தனர். தங்கள் தலைக்கு மேலே ஓர் தெய்வீக சக்தி வியாபிப்பதை
அறிந்து பரவசப்பட்டனர். மேலிலிருந்து இறங்கியது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின்
சக்தி என்றும், மேல் நிலை மனத்திற்கான புதிய திரு உரு மாற்றப்பணி தொடங்கி
இருப்பதாகவும் அன்று ஸ்ரீ அரவிந்தர் அறிவித்தார். ஸ்ரீ அன்னையும் அதை
ஆமோதித்து அனைத்து சாதக்ர்களுக்கும் ஆசி அளித்தார். அன்று முதல் அது ஸ்ரீ
அரவிந்தர் ஆசிரமத்தில் ‘சித்தி நாள்’ என்று கொண்டாடப்படலாயிற்று
அதற்கு முந்தைய தினமான நவம்பர் 23
அன்றுதான் அதாவது 23-11-1926ல்தான் கிருஷ்ணரின் சைதன்ய சக்தியோடு ஸ்ரீ சத்ய
சாய்பாபா அவதாரம் செய்தார்.
பிறந்தது முதலே பல்வேறு பால்ய லீலைகளை
நிகழ்த்திய பாபா, தனது 14ஆம் வயதில் தன்னை ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவின்
மறுபிறவி என்று கூறியதுடன், ஷிர்டி பாபாவின் வாழ்க்கையில் நடந்த பல
நிகழ்ச்சிகளை தெள்ளத் தெளிவாக நினைவு கூர்ந்து, பாபாவுடன் தொடர்பில் இருந்த
பலரைச் சந்தித்து தான் ஷிர்டி பாபாவின் மறுபிறவிதான் என்பதை நிரூபித்தார்.
தங்களது உடல்தான் வேறு வேறு என்றும் ஆன்மா
ஒன்றுதான் என்றும் கூறினார் பாபா. மேலும் தான் பிறந்து சத்திய யுகத்தை
நிலைநாட்ட வேண்டும் என்று வெங்கோபா போன்ற பல யோகிகளும், பரத்வாஜர் போன்ற பல
முனிவர்களும் பிரார்த்தனை செய்து கொண்டதால்தான் தன் அவதாரம் நிகழ்ந்தது
என்றும் அவர் குறிப்பிட்டார்.
அப்படியானால் கிருஷ்ண சக்தியோடு உலகில்
தோன்றியிருப்பதாக நம்பப்படும் ஸ்ரீ அரவிந்தர் யார் என்று ஒரு பக்தர்
கேட்டதற்கு பாபா, ”அவதாரம் நிகழும் பொழுது அவனது அடியார்களும் அவருடனோ
அல்லது அதற்கு முன்போ பிறந்து அதற்கு ஆயத்தமாகச் சில செயல்களைச் செய்ய
வேண்டி வரும். அப்படி எனது சக்தியின் உயிர்ப்புடன் புவியில் தோன்றியவர்தான்
அரவிந்தர் என்றும், எனது அவதாரம் துரிதமாக நிகழ்வதற்கான பணிகளை அவரும்,
வெங்க அவதூதர் போன்ற பல யோகிகளும் முன்னரே பிறந்து, புவியில் செயல்பட்டனர்
என்றும் தெரிவித்தார். தனக்கு உதவியாளராக இருந்த கஸ்தூரி யசோதையின் அவதாரம்
என்றும் பாபா குறிப்பிட்டார்.
மேலும் அவர், “இது போன்ற விஷயங்கள் உங்களது
விஞ்ஞான அறிவிற்கு அப்பாற்பட்டது. சாதாரண புலன்களால் இதுபோன்ற விஷயங்களை
ஆராய இயலாது” என்றும் குறிப்பிட்டார்.
எங்கே விஞ்ஞானம் முடிவுறுகிறதோ அங்கே மெய்ஞ்ஞானம் தொடங்குகிறது என்பது பாபாவின் கூற்று.
ஓம் சாயீஸ்வராய வித்மஹே
சத்ய தேவாய தீமஹி
தந்நோ ஸ்ர்வ ப்ரசோதயாத்
No comments:
Post a Comment