யோகா தோன்றிய முறை
யோகா என்ற வார்த்தையே பரந்த, விரிவான பொருள் கொண்டது. சமஸ்கிருத வார்த்தை ‘யுஜ்’ என்பதிலிருந்து தோன்றியது. ‘யுஜ்’ என்றால் ‘சேர்வது, இணைப்பது’ என்று பொருள். இந்த இணைப்பது என்பது உடலையும், மனத்தையும், நுகத்தடியால் இணைக்கப்பட்ட இரு எருதுகளைப் போல சேர்த்து நடத்துவது என்றும் பொருள் கொள்ளலாம். மனிதனை அவனின் உன்னத, உயர்ந்த லட்சியத்துடன் சேர்ப்பது என்றும் சொல்லலாம். அதாவது குறைகளுள்ள சரீரத்தை, குறையில்லாத தெய்வீக ஆத்மாவுடன் இணைப்பது எனலாம்.
மனிதனின் உடல், பிராணன் (உயிர்), மனம், அறிவு இவற்றை ஒருங்கிணைத்து செயல்பட வைப்பது என்றும் பொருள் கொள்ளலாம்.
கீதையின் படி யோகா “செயல்திறமை” என்று விவரிக்கப்படுகிறது. “செய்வன திருந்தச்செய்” என்கிறது ஆத்திசூடி.
இன்று யோகா உலகெங்கும் பரவிய கலாசாரமாகிவிட்டது. நம் நாட்டை விட வெளிநாடுகளில் பிரபலமாகிவிட்டது.
யோகாவின் பழமை
கற்காலத்திலேயே, மனிதன் கற்களை ஆயுதமாக பயன்படுத்திய காலப்பகுதியிலேயே யோகாவும் தோன்றிவிட்டதாக கருதப்படுகிறது. பண்டையகால யோகா அந்தகால சமூக இயல்புகளை சார்ந்திருந்தது. தினசரி பழக்க வழக்கங்களை நிர்ணயிக்கும் கலையாக தொடங்கியிருக்கலாம்.
யோகாவை பற்றிய ஆதாரம் சிந்து – சரஸ்வதி நதி சமவெளி நாகரிக இடங்களில் கிடைத்த கலை பொருட்களில் கிடைத்துள்ளது. இந்த சிந்து நதி நாகரிகம், உலகிலேயே பழமையான ஒரு பெரிய சமூகத்தின் சரித்திரம். அந்த காலத்திலேயே மிகவும் முன்னேறியிருந்த ஒரு நாகரிக சமுதாயம். இங்கு நடந்த தொல்பொருள் ஆய்வுகளின் கிடைத்த கல்முத்திரைகள், யோகாசனங்களை காண்பிக்கின்றன. இதனால் யோகா 3000 வருடங்களுக்கு முன்பே இருந்தது என்பது நிரூபிக்கப்படுகிறது. சிந்து வெளி சமுதாயம் கி.மு. 1900ல், சரஸ்வதி நதி வற்றிப்போனதால் அழிந்து போயிற்று. சிந்து சமவெளி காலம் கி.மு. 2500 – 1800 எனலாம்.
வேதகால யோகா
உலகிலேயே தொன்மையான புனிதநூல்கள் வேதங்கள். வேதம் என்ற வார்த்தை சம்ஸ்கிருதத்தின் “வித்” என்ற வார்த்தையிலிருந்து உருவானது. “வித்” என்றால் ‘பார்ப்பது’ அல்லது “அறிவது” என்று பொருள். வேதம் என்றால் “விவேகம்” ‘அறிவு’ “ஞானம்”, “புலமை” என்று கூறலாம். வேதங்கள் பரம்பொருளை பாடும் ஸ்லோகங்கள். இவற்றில் யோகங்களைப்பற்றிய போதனைகள் காணப்படுகின்றன. வேதங்கள் வியாச மாமுனியால், கி.மு. 1400ல் நான்கு பகுதிகளாக தொகுக்கப்பட்டன. அவை நமக்கு நன்கு தெரிந்த ரிக் வேதம் யஜுர்வேதம், சாமவேதம் மற்றும் அதர்வண வேதங்களாகும். வேதங்களில் உள்ள துதிப்பாடல்கள், சடங்குகள் இவற்றை விவரிக்க பல நூல்கள் (சூத்ரங்கள்) எழுதப்பட்டன. வேதகாலம் கி.மு. 1500-500 எனலாம்
யோகா சூத்திரத்திற்கு முன்பு
யோகாவின் அஸ்திவாரம் உபநிஷத்துகள். ஆன்மிகம், வேதாந்தம், வாழும் முறை முதலியவற்றை விவரிக்கும் உபநிஷத்துகள் கி.மு. 1500 லிருந்து கி.மு. 1800 வரை, தோன்றியதாக தெரிகிறது. கிட்டத்தட்ட 200 உபநிஷத்துக்கள் இருக்கின்றன. யோகங்களை பற்றியே கீதையில் சொல்லப்படுகிறது. ஞானயோகம், பக்தியோகம், ராஜயோகம், கர்ம யோகம் என்ற நான்கு வகை யோகங்களை கீதை விவரிக்கிறது. “கடமையை செய், பலனை எதிர்பாராதே’ என்பது கீதையின் சாராம்சம்.
பிரசித்தி பெற்ற யோகா
பல நூல்களில் சிதறிக்கிடந்த யோகக்கலையை, திரட்டி, வடிவமைத்து, ஒரு முழுமையான கலையாக நமக்கு அளித்தவர் பதஞ்சலி முனிவர். அவரது நூலான ‘யோகா சூத்திரம்’ 195 சூத்திரங்கள் அடங்கியது. 2500 அல்லது 3000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. பதஞ்சலி முனிவரின் கோட்பாடு சாங்கிய வேதாந்தை பின்பற்றியது. ஒவ்வொரு மனிதனும் சரீரம் (பிரகிருதி), ஆத்மா (புருஷா) இவற்றை உடையவன். யோகா பயில வேதநூல்களை படிப்பது அவசியம். ஞானத்தை அடைய பற்றற்று வாழ வேண்டும். மனித வாழ்வின் துன்பங்களை போக்க, கர்மயோகம் (உழைப்பு), ஆழ்ந்த தியானம் (ஞான யோகம்) உதவும். மனித குணங்களை சீராக்க பதஞ்சலிமுனிவர் “கிரியாயோகம்” என்ற கர்மயோகத்தின் ஒரு பகுதியையும் இயற்றினார். அவருடைய “த்வைத” (இரண்டானது) கொள்கைகள் பிற்காலத்தில் பெரிதாக ஏற்றுக் கொள்ள படாவிட்டாலும், அவர் வகுத்த அஷ்டாங்க யோகம் இன்றும் யோகாவின் முக்கிய அம்சமாக கடைபிடிக்கப்படுகிறது. பதஞ்சலி முனிவருக்கு பின், பலநூற்றாண்டுகள், யோகிகள் த்யான யோகத்தை மட்டும் கடைபிடித்து, யோகாசனங்களை அதிகம் செய்யவில்லை. உடலை பேணுவதும் யோகாதான் என்ற கொள்கை பிற்காலத்தில் உணரப்பட்டது.
சாஸ்தீரிய யோகா காலத்தின் பின்னர்
இந்த புதிய காலத்தில் ஆத்மாவை உலகபற்றிலிருந்து விடுதலை செய்ய முயல்வதை விட, உலகவழக்கத்துடன் ஒத்து வாழவைப்பதே நல்லது என்ற கொள்கை வலுவடைந்து வருகிறது. 15ம் நூற்றண்டில் யோகிகள் உடலில் மறைந்திருக்கும் “சக்திகளை” ஆராய முற்பட்டனர். 19ம் நூற்றாண்டில் வெளி நாடுகளுக்கு யோகா அறிமுகப்படுத்தப்பட்டது. 1960ல் பல இந்திய யோகிகள் யோகாவை கற்றுக்கொடுக்க வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டனர். இதனால் யோகாசனங்கள் மேலும் முன்னேற்றமாக திட்டமிடப்பட்டன. ஹத யோகம் உலகம் முழுவது பரவியது.
ஹதயோகம்
சரியான ஓய்வு, சரியாக சுவாசிக்கும் முறை, சரியான உடற்பயிற்சி சரியான உணவு முறை, சீரான எண்ணங்கள், தியான முறைகள் முதலியனவற்றை கொண்டது ஹத யோகம். மனதை ஒருநிலைப்படுத்துவது, தியானம். தன்னை அறிந்து கொள்வது போன்றவற்றை ஹதயோகத்தால் அடையலாம். தேவை – ஆர்வம், ஒழுக்கம். மற்றும் நல்ல குரு.
No comments:
Post a Comment