Friday, 23 March 2012

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாழ்வில்…

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாழ்வில்…

பாம்பன் சுவாமிகள் முருக பக்தர். அவர் தம் கனவில் ஆவியுலக வாசிகளையும், சொர்க்கம் மற்றும் நரக மக்களையும் கண்டதாக தமது சுயசரித நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஒருநாள் நடுநிசியில் சுவாமிகள் ஒரு கனவு கண்டார். அக்கனவில் அவர் ஒரு காட்டுப் பாதை வழியே நடந்து கொண்டிருந்தார். சுற்றிலும் கற்றாழை, கள்ளிச் செடிகள். வறண்ட மணற்பாங்கான அந்தப் பாதையின் ஓரத்திலே கரிய நிறமுடைய சிலர் கூச்சலிட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். சுவாமிகளைப் பார்த்ததும், கீழே இருந்த கல்லையும், மணற் துகளையும் அள்ளி வீசி எறிந்தனர். இதைக் கண்டு திகைத்துப் போய் அவர் நின்று கொண்டிருந்த பொழுது, ஒளியுடைய தேகமுடைய மூவர் சுவாமிகள் அருகே வந்தனர். தங்களுடன் வருமாறு கூறி உடன் அழைத்துச் சென்றனர். அந்தப் பாதை நீண்டு கொண்டே சென்றது. இறுதியில் பல வண்ண நிறமுடைய மலர்களும், செடி, கொடிகளும் இருந்த பகுதிக்கு சுவாமிகள் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே இனிய நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. மக்களும் ஒருவர் மீது ஒருவர் அன்புடையவராய் காணப்பட்டனர். அது சொர்க்கம், நரகம் பற்றிய கனவு என்றும்,  அதை உணர்த்துவதற்காகவே அக்கனவு வந்தது என்றும் சுவாமிகள் பின்னர் உணர்ந்து கொண்டார்.
பாம்பன் சுவாமிகள்
ஒரு நாள்… கடற்கரை மணல் வெளியில் காலாற நடந்து கொண்டிருந்தார் சுவாமிகள். அப்பொழுது அங்கே வந்தார் ஒரு ஆங்கில மருத்துவர். வந்தவர், சுவாமிகளிடம், “ஆன்மா என்ற ஒன்று கிடையவே கிடையாது. மனிதனின் உடலில் உள்ள உதிரமே அறிவுடைய ஆன்மா. முன்னோர்கள் எல்லோரும் மூடர்கள். இது பற்றி எதுவும் அறியாது எல்லாம் தவறாக எழுதி வைத்து விட்டனர்” என்று வாதித்தார்.
அதைக் கேட்டு மிகவும் மன வருத்தம் உற்ற பாம்பன் சுவாமிகள், ” உதிரம் எப்படி அறிவுடைய ஆன்மாவாக முடியும்? அப்பொழுது அதிக உதிரம் உடையவன் அதிக அறிவுடையவன் என்றல்லவா பொருள்படும்! அது சரியாகுமா? உதிரத்திற்கும் ஆன்மாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. உதிரத்தை, பிராணவாயுவும், பிராண வாயுவை ஆன்ம உணர்வும் பற்றி நிற்கின்றன. ஆன்மா என்பது மிக நுண்ணிய நுணுக்க உணர்வை உடையது.” என்று ஆன்ம தத்துவத்தை அந்த மருத்துவருக்கு விரிவாக விளக்கினார்.
அது போன்றதொரு விளக்கத்தை அதுவரை கேட்காத அந்த மருத்துவர், உண்மையை உணர்ந்து கொண்டு, சுவாமிகளை வணங்கி விடை பெற்றார்.

No comments:

Post a Comment