Wednesday, 25 January 2012

கனவுகளும், நனவுகளும்


 கனவுகளும், நனவுகளும்..!

மனதில் ஆழ்ந்து போன விஷயங்களும், சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் அதையும் தாண்டி நாம் காணும் கனவின் பலன்களை அறிய ஆர்வப்படுகிறோம். நாம் கண்ட கனவுகள் அனைத்துமே அதற்கேற்ற பலன்களைத் தருகிறதா என்றால், இல்லை என்பதே நிதர்சன உண்மை!

மருத்துவ உலகில் கனவைப் பற்றிய ஆய்வு எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் மட்டுமே உள்ளது. நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.

தண்ணீர் தேங்கியிருப்பது போல் கனவு கண்டால் புதிய நண்பர்கள் நிறைய கிடைப்பார்கள். இளம் வயதினருக்கு காதலன், காதலி கிடைப்பார்கள். அப்படி கனவு காணும்போது தேங்கியிருப்பது நல்ல தண்ணீர் என்றால் பிரச்சினை விலகும். நீர் வற்றிய குளம் கனவில் வந்தால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்தது தாமதப்படும். அரசு கடன் தாமதமாகும். தடைகள் வரலாம். தண்ணீர் நிறைந்த குளத்தை கனவில் கண்டால், நீர் நிலையை கனவில் கண்டால் பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும். நன்மை நடக்கும். தாமரைப் பூவை கனவில் கண்டால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். நிறைய பணம் சேரும். கடன் தீரும். வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். குளத்தில் கால் கழுவுவது போல் கனவு கண்டால் கஷ்டம் மற்றும் நோய் நீங்கும். உற்சாகம் கூடும். நல்ல செய்திகள் வரும்.

குளத்தில் குளிப்பது போன்று கனவு கண்டால், கடவுள் அருள் நிறைய கிடைக்கும். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கியிருப்பது போல் கனவில் வந்தால், பொருளாதார வளம் ஏற்படும். சிலருக்கு அக்கம்பக்கம் தொந்தரவு ஏற்படும்.

மூதாதையர்கள் கனவில் வந்தால் அல்லது ஆசீர்வாதம் செய்தால் நன்மை பிறக்கும். பிரச்சினை இருந்தால் நல்ல முடிவு ஏற்படும். கனவில் இறந்துபோன உறவினர்கள் பேசினால், உதவிக்கு நிறைய பேர் வருவார்கள். நல்ல பெயரும், புகழும் கூடும். உறவினர்கள் உங்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டால் பணம் வரும். எதிர்பார்க்காத பணம், புகழ் குவியும். பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று கூடும். உறவினர்களிடையே இருந்த விரிசல் மறையும்.

மூதாதையர் உறங்குவதாக கனவு வந்தால், ஆபத்திலிருந்து தப்பி விடுவீர்கள். மூதாதையர் உங்களுக்கு சாப்பாடு பரிமாறுவதாக கனவு கண்டால், சுபச்செய்தி வந்து சேரும்.

நீங்கள் கிழிந்த உடையை உடுத்தியிருப்பதாக கனவு வந்தால், பணம் வந்து சேரும். எந்த செயலிலும் தனியாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். புத்தாடை அணிந்தது போல் கனவு வந்தால், பிரச்சினையில் சிக்கப் போகிறீர்கள். எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். மன அமைதி குறையும். சம்பந்தமில்லாத குற்றச்சாட்டுகள் உங்கள் மீது சுமத்தப்படும்.

உங்களுடைய கனவில் சிங்கம் வந்து, உங்களை விரட்டினால் அரசு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். ஆனாலும் பிரபலமானவர்கள் உதவியுடன் அந்த பிரச்சினையை சமாளிப்பீர்கள்.

கனவில் பாம்பு வந்தால் உங்களுக்கு கடவுள் துணை நிற்பார். அதிர்ஷ்டம் ஏற்படும். பெண்கள் கனவில் பாம்பு வந்தால் ஆயுள் கூடும். கடன் பிரச்சினைகள் தீர்ந்து ஒரு முடிவுக்கு வரும்.

கனவில் யானை வந்தால் அரசாங்க உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும். யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். பிரிந்த கணவன்- மனைவி இடையே உறவு ஏற்படும். இளம் தலைமுறையாக இருந்தால் திருமணம் நடக்கும்.

ஊதுபத்தி புகை வருவது போல் கனவு கண்டால் துக்கம் நீங்கும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தீயை கனவில் கண்டால் நோய் விலகும். புதிய உற்சாகம் பிறக்கும். தீயை நீங்கள் கொளுத்துவதாக கனவில் வந்தால் முன்கோபத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். நாக்கில் கவனம் தேவை. தேவையில்லாத வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்வீர்கள்.

உங்கள் கனவில் திருவிழாவை கண்டால் புதுவீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாகன யோகமும் ஏற்படும். சொத்து சேரும்.

நகைகள் வாங்குவது போல் கனவு கண்டால் புதிய தொழில் தொடங்குவீர்கள். இல்லாவிட்டால் இருக்கின்ற தொழிலில் மேன்மை உண்டாகும். நகைகளை அடகு வைப்பதுபோல் கனவு வந்தால் சொத்து விற்பனை ஆகும். நகைகள் களவு போவதுபோல் கனவு கண்டால் பண வரவு உண்டாகும். வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வது போல் கனவு கண்டால், உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள். புகழ் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment