எல்லாம் பகவான் செயல்!
தினமும் சிவன் கோவிலுக்கு போய் சுவாமி தரிசனம் செய்வான் ஒரு ஏழை. ஒரு நாள், பிள்ளையாரைப் பார்த்து, “இந்த ஏழைக்கு இன்று இரவுக்குள், நூறு ரூபாய் கிடைக்கும்படி செய்…’ என்றார் சிவன். இவர் சொன்னது ஏழைக்குத் தெரியாது.
சிவன் சொல்வதை, ஒரு கமிஷன் ஏஜன்ட் கேட்டுக் கொண்டிருந்தான். “இந்த ஏழைக்கு இன்று இரவுக்குள் நூறு ரூபாய் கிடைக்கப் போகிறது. இவனிடம் பேரம் பேசி, ஏதாவது ஒரு கமிஷன் அடிக்கலாம்…’ என்று எண்ணினான். ஏழையிடம், “ஐயா… உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நான் உங்களுக்கு ஏதாவது உபகாரம் செய்யலாம் என்று நினைக்கிறேன். நான் உங்களுக்கு ஐம்பது ரூபாய் தருகிறேன்; ஆனால், ஒரு நிபந்தனை… இன்று இரவுக்குள், உங்களுக்கு ஏதாவது பணம் கிடைத்தால், அதை அப்படியே என்னிடம் கொடுத்து விட வேண்டும்…’ என்றான்.
யோசித்தான் ஏழை… “இவன் யார்? இவன் எதற்காக பணம் தருகிறேன் என்று சொல்கிறான்? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது…’ என்று எண்ணி, “அதெல்லாம் வேண்டாம்…’ என்றான். விடுவதாய் இல்லை கமிஷன் ஏஜன்ட். ஐம்பது ரூபாயிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தி, தொண்ணூறு ரூபாய் தருவதாகச் சொன்னான்.
சரி என்று ஒப்புக்கொண்டு தொண்ணூறு ரூபாயை வாங்கிக் கொண்டு போய் விட்டான் ஏழை. வழக்கம்போல் சிவ தரிசனத் துக்குப் போனான்.
பிள்ளை யாரைப் பார்த்து, “இந்த ஏழைக்கு நூறு ரூபாய் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தாயா?’ என்று கேட்டார் சிவன். அதற்கு பிள்ளையார், “இவனுக்கு தொண்ணூறு ரூபாய்தான் கொடுத்தேன்…’ என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த கமிஷன் ஏஜன்ட், “ஐயையோ… இவனுக்கு நானல்லவா, தொண்ணூறு ரூபாய் கொடுத்தேன்; பிள்ளையார் கொடுக்க வில்லையே…’ என்றான்.
அப்போது, “ஐயா, நாங்கள் தேவலோகத்தில் ரூபாய் நோட்டு அச்சடித்து; யாருக்கும் கொடுப்பதில்லை. பணமெல்லாம் உங்களிடம் தான் உள்ளது; அதை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சேரும்படியாக, நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்; இருப்பவன், இல்லாதவனுக்குக் கொடுக்கும்படி செய்கிறோம்; அவ்வளவுதான்…’ என்றார் சிவன்.
அப்போதுதான் கமிஷன் ஏஜன்டுக்கு புத்தி வந்தது. எல்லாம் அவன் செயல்; நம்மால் ஆவது எதுவுமில்லை. பணம் வருவதும், போவதும் அவன் செயல் தானே தவிர, நம் சாமர்த்தியம் எதுவுமில்லை என்பதை புரிந்து கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.
பரமசிவனையும், பிள்ளையாரையும் நன்றாகக் கும்பிட்டு, ரூபாய் நோட்டை மடியில் செருகி, சந்தோஷமாகப் போனான் ஏழை. யார், யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, அது கிடைக்கும்படி செய்வது, பகவான் செயல். இதில், நம் சாமர்த்தியம் எதுவுமில்லை!
No comments:
Post a Comment