Wednesday, 25 January 2012

கனவு கண்டு பயப்படாதீர்கள்!


கனவு கண்டு பயப்படாதீர்கள்!

கெட்ட சொப்பனம் கண்டால் நல்லதில்லை என்பது பொதுவாக மக்களின் `சென்டிமென்ட்’. `ஆனால் கனவுகளை நினைத்து பயப்படாதீர்கள், அவை உதவியே செய்கின்றன’ என்கிறார்கள், ஆய்வாளர்கள்.
21 வயதாகும் இளம்பெண் ஜானுவுக்கு பல மாதங்களாகச் சரியான தூக்கமில்லை. அவருக்குள் எதுவோ ஒன்று சுத்தியல் போலத் தொந்தரவாக அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. எனவே மனோதத்துவவியல் நிபுணரின் உதவியை நாடினார் ஜானு. அவர், ஒரு பாம்பு தன்னைச் சுற்றி வளைப்பதை போலவும், பின்னர் அது மறைந்து விடுவதை போலவும் அடிக்கடி கனவு கண்டு வந்திருக்கிறார்.
ஜானுவுடன் சிலமுறை பேசிய மனோதத்துவவியல் நிபுணர் ஸ்ரீதாரா, ஜானுவை பாம்புகளை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்படியும், அவற்றின் இயல்பை புரிந்துகொள்ளும்படிம் கூறினார். அதன் முலம் ஒருவேளை ஜானுவின் `பாம்புக் கனவுகள்’ மறைந்துவிடலாம் என்பது மனோதத்துவவியல் நிபுணரின் எண்ணம்.
“எதிர்காலம் பற்றிய தனது பயத்தின் அடையாளமாக அந்தக் கனவுகள் இருக்கக்கூடும் என்று அந்த பெண் கூறினாள்” என்கிறார், ஸ்ரீதாரா.
ஜானுவின் அம்மா, உள்ளூரில் ஒரு மரத்தடியில் உள்ள நாகர் சிலையைச் சுற்றி தனது மகளை அன்றாடம் வலம் வரச் செய்தார்.
“ஜானுவின் எதிர்காலம் பற்றிய பயம் சீராகும் என்பதன் அடிப்படையில் இந்தச் சடங்கு அமைந்துள்ளது” என்கிறார், ஸ்ரீதாரா. இனி அவருக்கு அந்த மாதிரியான கனவுத் தொந்தரவு இருக்காது என்கிறார் இவர்.
ஜானுவின் `கெட்ட சொப்பனத்தால்’தான் அவருக்குள் உறுத்திக்கொண்டிருந்த பிரச்சினை பற்றி அறிய முடிந்தது என்கிறார் ஸ்ரீதாரா. “அவர் தனது பயத்தை என்னிடம் சொன்னதுமே நிம்மதியாகவும், இலேசாகவும் உணர்ந்தார்” என்று விளக்குகிறார்.
ஒரு கெட்ட கனவு கண்டால் அதை பற்றி உடனே தாளில் எழுதலாம் என்கிறார் ஸ்ரீதாரா. அதன் முலம், பிரச்சினையைத் தூர எறிந்துவிடலாம் என்பது இவரது கருத்து.
“ஒரு கெட்ட கனவு கண்டு விழித்தவுடனே அதை பற்றி எழுதுங்கள். முழுவதும் ஞாபகமில்லாவிட்டாலும், ஞாபகமுள்ளவரை எழுதுங்கள். அதன் முலம், மறுபடி அந்தக் கனவு வராமல் தடுக்கலாம்” என்கிறார்.
மணிபால் மருத்துவமனை மனோவியல் துறைத் தலைவர் டாக்டர் முரளிராஜும் அதை ஆமோதிக்கிறார். `தனிநபர்களுக்கு அவர்களின் மனச்சுமைகளுக்கு வடிகாலாக அமையும் ஒரு நல்ல விஷயம் கனவு’ என்கிறார் அவர்.
“அந்த வகையில் `கெட்ட கனவுகள்’ ஒருவரின் உணர்ச்சிகளை சரிபடுத்திக்கொள்ள உதவுகின்றன. ஒருவர் ஒரு கனவு கண்டால் அந்த உணர்ச்சி அவரிடமிருந்து வெளியேறி விடுகிறது. அவரும் `ரிலாக்சாகி’ விடுகிறார்” என்று விளக்கிக் கூறுகிறார், முரளிராஜ்.
கனவுகள் வடிகாலாக இருப்பது மட்டுமல்லாமல், நிஜவாழ்வின் சிக்கலான சூழல்களை எதிர்கொள்ளவும் அவை உதவுகின்றன. பின்லாந்து ஆராய்ச்சியாளரான ஆன்ட்டி ரிவோன்ஸோ செய்துள்ள ஆய்வின்படி, மனிதர்கள் வாழ்வுடன் இயைந்து போக உதவுவதாக கனவுகள் உள்ளன.
“பொதுவாக கெட்ட கனவுகள் அச்சுறுத்தும் நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன, அவற்றைக் கடந்து செல்லும்படி நம்மைத் தள்ளுகின்றன. எனவே, நிஜ வாழ்வில் நாம் அதுமாதிரியான அச்சுறுத்தும் நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது, கனவில் நமக்கு `பயிற்சி’ இருப்பதால் தயாராகவே இருக்கிறோம்” என்கிறார் முரளிராஜ்.
“கெட்ட சொப்பனம் என்பது விமர்சனம் அறியாமல் ஒரு படத்தை பார்பது போல. எனவே அதன் அர்த்தம் என்ன என்று சம்பந்தபட்டவருக்கு புரியாது.” என்கிறார் மற்றொரு மனோதத்துவவியல் ஆலோசகரான பி. கபூர்.

No comments:

Post a Comment