Tuesday, 17 January 2012

ஆங்கிலம் துணுக்குகள் 22


ஆங்கிலம் துணுக்குகள் 22 (Hear and Listen)

"Hear and Listen" இரண்டு சொற்களுக்கும் இடையிலான வேறுப்பாடுகள் என்ன?

ஒரு மேடையில் ஒரு சிறந்த பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கிறார் என நினைத்துக் கொள்ளுங்கள். பேச்சாளர் என்ன பேசுகிறார் என நீங்கள் கவனமாகச் செவிமடுத்து கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதேவேளை அரங்கில் இருக்கும் மக்கள் கூட்டத்தினரின் மெல்லிய குசுகுசுப்புகள், ஆரவாரம், கூச்சல்கள் என எல்லாமும் ஒரே பின்னனி இரைச்சலாக (noise) உங்கள் காதுக்களுக்கு கேட்டுக்கொண்டிருக்கின்றன.

இங்கே நீங்கள் கவனமாக அப்பேச்சாளர் என்ன பேசுகிறார் என்பதற்கு முன்னுரிமை கொடுத்து செவிமடுத்து கேட்டுக்கொண்டிருப்பதைத் தான் "Listen" குறிக்கிறது.

அந்த அரங்கில், உங்களுக்கு தேவையற்ற ஒலிகள் அல்லது பின்னனி இரைச்சல்கள் உங்கள் காதுகளுக்கு கேட்டவண்ணமே இருப்பதையே "hear" குறிக்கிறது.

Hear = காதால் கேள் (நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் காதுகளுக்கு கேட்கும் ஒலிகள் அல்லது எம்மை சூழ எழும் இரைச்சல்கள்.)

Listen = காதால் (கவனமாக) கேள் (நாம் விரும்பினால் மட்டுமே, நாம் எமது முழுக்கவனத்துடன் உன்னிப்பாகக் கேட்கும் செயல்.) அதனையே "செவிமடுத்தல்" எனப்படுகின்றது.

Do you hear the bird singing?
உனக்கு கேட்கிறதா பறவை பாடுவது?
Do you hear the sound?
உனக்கு கேட்கிறதா அச்சத்தம்?

I listen to news.
நாம் செவிமடுக்கிறேன் செய்திக்கு.
I listen to it.
நான் செவிமடுக்கிறேன் அதற்கு.

கவனிக்கவும்:
Listen உடன் + to இணைந்தே எப்போதும் பயன்படும்.

பாடசாலையில் ஆசிரியர் "Listen to me!", "Listen to me!!" என எத்தனை சிரமம் எடுத்து கற்பித்தாலும், பின்வரிசையில் குந்தியிருக்கும் சில மாணவர்கள், ஆசிரியர் என்ன கற்பிக்கிறார் என்பதற்கு தமது கவனத்தை செலுத்தாது தாங்களுக்குள் எதையோ செய்துக்கொண்டும் குசுகுசுத்துக்கொண்டும் இருப்பர்; ஆசிரியரின் உரை வெறுமனே அவர்கள் காதுகளுக்குள் கேட்டுக்கொண்டு (hear) மட்டும் இருக்கும். இதனால் பாடத்தை அவர்களால் சரியாக புரிந்துக்கொள்ள முடியாது. ஆனால் ஆசிரியர் என்ன கற்பிக்கிறார் என்பதற்கு தமது முழுக்கவனத்தையும் செலுத்தி உன்னிப்பாக செவிமடுக்கும் மாணவர்கள் பாடத்தை தெளிவாக விளங்கிக்கொள்வர்.

எனவே ஆசிரியர் கற்பிக்கும் போது, வெறுமனே (hear) கேட்டுக்கொண்டிராமல்; உங்கள் முழுமையான கவனத்தை செலுத்தி உன்னிப்பாகக் (listen) செவிமடுத்தல் முக்கியம்.

"சிறந்த பேச்சாளராக வேண்டும் என நினைப்போர், முதலில் சிறந்த கேட்பாளராக இருத்தல் வேண்டும்." என்பது ஒரு உலகப் பொது மொழி. இங்கே "கேட்டல்" என்பது hearing என்பதை குறிப்பதல்ல; listening என்பதைக் குறிப்பதாகும்.

Are you listening to me?

மீண்டும் இன்னுமொரு பாடத்தில் சந்திப்போம்!

No comments:

Post a Comment