Monday, 30 April 2012

ஆன்மிக சிந்தனைகள் »அதிவீரராம பாண்டியன்


நிறைவான வாழ்க்கை வேண்டுமா?

ஒருவருக்குத் தீங்கு செய்பவர்கள் தம்மால் தீங்கு செய்யப்பட்டவர்களின் கண்களின் முன்பாகவே கேடு அடைவது திண்ணம்.
தூரத்திலிருந்து துன்பம் செய்கிறவனை வெறுப்பதைக் காட்டிலும் அருகிலிருந்து துன்பம் செய்கிறவனை அதிகம் வெறுக்க வேண்டும். புறப்பகையைவிட உட்பகையே அபாயகரமானது.
புண்ணியத்தினால் கிடைத்த தனம் குறைவுபடாது. தன்னுடைய தனத்தைத் தான் மட்டுமே அனுபவிப்பது தகுதியுடையதல்ல. யாசகர்கள் எதைக் கேட்க நினைத்தார்களோ அதைக் கொடுத்தால் அல்லாமல் அவரால் தரப்பட்ட புகழ் நில்லாது.
ஒருவருக்கு லாபத்துக்குக் கொடுப்பதைக் காட்டிலும் இரப்பவர்க்குக் கொடுப்பதில் அனேகங்கோடி இன்பமுண்டாகும்.
சிங்கத்துக்கு தான் வந்த வழியைத் திரும்பிப் பார்த்தல் இயற்கை.
யார் எதைச் சொன்னாலும் குற்றமுடையோர் தம்மைப்பற்றித் தாம் சொல்கிறார்கள் என்ற எண்ணிக் கொள்வார்கள். அவர்களிடம் குற்றம் இருக்கிற குற்றம்தான் இதற்குக் காரணம்.
இருவர் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கும் போது, அதில் அன்னியர் தலையிடுவது அறிவுடைமையாகாது.
ஒருவனுக்குப் பிறக்குமிடம், பழகும் இடம், உறையும் இடம் ஆகியவை நல்ல இடங்களாக இருப்பின் நன்மை பயக்கும்.
நல்ல குலத்தில் நல்லோருக்குப் பிறந்து, நல்லோருடன் வளர்ந்து, பெரியோர்களுடன் சேர்ந்து பெருமைகொண்டு வாழ்பவன் வாழ்க்கையில் குறையேதுமில்லாமல் நிறைவே நிறைந்திருக்கும்.
நல்லது செய்பவன் எந்நாளும் மனத்திருப்தியோடு வாழலாம். பொல்லாங்கு செய்பவன் புழுங்கி புழுங்கிச் செத்துக் கொண்டிருப்பான்.

ஆளை பார்த்து அறிவை எடை போடாதீர்

அறிஞர்கள் நல்ல நூல்களைக் கற்று அவற்றின் பொருள்களை சந்தேகமின்றி உணர்ந்து ஐம்புலன்களையும் கட்டுக்குள் அடக்கி தன்னிலேயே அடங்கி வாழ்பவர்கள். அடக்கம் தான் அறிஞருக்கு உண்மையான அழகாகும்!
வறுமை வந்தபோதும் ஒழுக்க நெறியில தவறாமல் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு வறுமையிலும் செம்மையாக விளங்குவது தான் ஏழைகளுக்கு அழகாகும்!
பெரிய பனம் விதை முளைத்து உயரமாக வானுற ஓங்கி வளர்ந்திருந்தாலும், அதனுடைய நிழல் ஒருவர் இருந்து இளைப்பாறவும் போதுமானதாக இருக்காது. அதாவது, வளர்ச்சியால் உயர்ந்து காணப்படுகிறவர்கள் எல்லாரும், பண்பால் பிறருக்கு உதவும் தன்மையோடு உயர்ந்து இருப்பார்கள் என்று நினைப்பது தவறு.
மீன் முட்டையை விட சிறியதான ஆலம் விதை பெரிய மரமாக வளரும். ஓர் அரசன் தன்னுடைய நால்வகைப் படையோடும் தங்கி அயர்வு போக்கப் போதுமான அளவு நிழலையும் தரும். மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது. சிறியவர்களும் அரிய பெரிய காரியங்களைச் சாதிக்கக் கூடியவர்களாயிருப்பார்கள். ஆகவே, உருவத்தைக் கொண்டு மதிப்பிடுதல் கூடாது.
வெளித் தோற்றத்துக்குப் பெரியவர்களாகத் தோன்றுகிறவர்கள் அத்தனை பேரும், அறிவிலும் அரிய பண்பிலும் ஆற்றலிலும் பெரியவர்களாக இருந்து விடமாட்டார்கள். பார்வைக்குச் சிறியவர்கள் போன்ற தோற்றமுடையவர்கள் அத்தனை பேருமே உண்மையில், அறிவிலும், அரிய பண்பிலும் ஆற்றலிலும் இளையவர்களாக இருந்து விடமாட்டார்கள்.
ஒருவர் பெறும் அத்தனை பிள்ளைகளும் அறிவுடைய பிள்ளைகளாகவோ, நல்ல ஒழுக்க நெறியில் சிறந்து விளங்குகின்ற பிள்ளைகளாகவோ, பெற்றோரைக் காப்பாற்றும் பிள்ளைகளாகவோ இருப்பார்கள் என எதிர்பார்க்கக்கூடாது.

உள்ளம் தூய்மை பெற வழி

* வானம், நெருப்பு, நீர், காற்று, மண் என்கின்ற பஞ்ச பூதங்களுக்கு அமைந்த முக்குணங்களும், அந்த கரணங்கள் நான்கும் ஆகிய இவை முதலிய யாவுமாய், தனக்கு ஆதியுமில்லாமல், அந்தமுமில்லாமல், உடலுக்கு உயிராய், உயிருக்கு உணர்ச்சியாய் ஒன்றினும் தோய்வின்றி நிற்பவனே அறிவுமயமான ஆண்டவன்.

* ஆண்டவனை வணங்கத் தலை இருக்கிறது. வாழ்த்த வாய் இருக்கிறது. மனமும் இருக்கிறது. ஆனால், அந்த மனம் கட்டுக்கடங்காமல் திரியும் காட்டுக் குரங்கினைப் போன்றது. ஆகவே, இறைவனை எப்போதும் எண்ணிக்கிடக்க இறைவனடியார்களிடம் எக்காலத்தும் பழகியிருக்க வேண்டும்.
* இறைவனை வழிபட்டால் உள்ளம் தூய்மை பெறும். உள்ளம் தூய்மையடைபவன் செல்வத்தைப் பெறுவான். சிறப்பினைப் பெறுவான். அல்லலைத் தவிர்ப்பான். அறிவு நிரம்பப் பெறுவான். கல்வியில் சிறந்து விளங்குவான். நற்கதி அடைவான்.
* தாம் விரும்பியதை முன்னமேயே பெற்றுக் கையில் வைத்திருக்க, அதைப் புரிந்துகொள்ளாமல் விரும்பியது இன்னும் கிடைக்கவில்லையே என்று வருந்துகிறவனைப் போல், படைத்த பரமனின் அருளைப் பெற்றும் பெறாதவர் போல் அறியாமல் வருந்துகிறவர்கள் அநேகர் உண்டு.
* ஆணவ மலத் துன்பத்தில் அழுந்திய மன ஆசையினால் அறிவு மயங்குபவன், வெவ்வேறு உருவமாகப் பிறந்து குயவன் சுழற்றும் சக்கரத்தைப் போலப் பிறவிக் கடலில் சுழன்று கிடப்பான்.
* செம்பில் களிம்பு போல் மலமானது ஆத்மாவை ஆதிமுதலே பற்றிக் கொண்டிருக்கும்.
* பொன்னை விரும்புதல், பூமியை விரும்புதல், பெண் மயக்கத்தை விரும்புதல் ஆகியவை ஒருவனுடைய மனவலிமையை அயர்வுறச் செய்வனவாகும்.

ஆண்டவன் அருளை நாடுங்கள்

* காலமெல்லாம் சென்றுவிட்டது. இளமை நம்மைவிட்டு நீங்கிவிட்டது. நம் எதிரே இப்போது காத்துக்கொண்டிருப்பது இறப்பு ஒன்றுதான் என்பதனை எண்ணியேனும் இறைவனை எண்ணிக்கிடக்க வேண்டும்.
* நம் உயிர் நம்மைவிட்டு நீங்கும் சமயத்தில், அலைந்து தேடி வைத்த செல்வமும், அருமை மனையாளும், மக்களும் ஏது செய்தும் நம் இறப்பைத் தவிர்க்க முடியாது 'இறைவா' என்று வேண்டினால், அப்போதும் ஆண்டவன் அருள் கிடைக்கும்.
* பூமிக்குப் பாரமாய், அவல வாழ்க்கையில் ஆசை வைத்து உடலைச் சுமந்து திரியும் உயிருக்கு நற்கதியைத் தேடிக்கொள்ள வேண்டும்.
* உயிரை ஓடவிட்ட உடலை, உற்றார் உறவினர் எடுத்துக் கொண்டுபோய் இடுகாட்டில் வைத்து விறகால் சுட்டுப் பொசுக்கும் நிலையினைப் பெறுவதற்கு முன், ஆண்டவனை எண்ணி மோட்சத்துக்கு வழி தேடிக் கொள்ள வேண்டும்.
* இறைவனை எண்ணாதவர்கள், எல்லா நலன்களையும் இழந்து, மானமிழந்து, நற்குணங்கள் அற்று வறுமை வாய்ப்பட்டு பலபேர் பார்த்து இகழக்கூடிய இழிநிலைக்கு உள்ளாகிச் சாவார்கள்.
* மனைவி, வீடு மற்றும் அறிந்தவர்கள் ஊரோடு சரி; உறவினர் தெரு வரை; ஆனால், ஆண்டவன் அருள்நமக்கு கிடைக்குமானால் நாம் செல்லுமிடமெல்லாம் அது நம்மை பின்தொடரும்.
* இவர் உறவினர், இவர் பகைவர் என்பதெல்லாம் அவரவர் செய்த வினையால் தான். ஆனால், அந்தச் செய்வினை யாரால்? அது ஆண்டவனால்;
* நாவுக்கு அழகு ஆண்டவன் நாமத்தைச் சொல்லல்; பாடலுக்கு அழகு ஆண்டவனைப் பாடுதல்; கலைக்கு அழகு அறிவோடிருத்தல்; தலைக்கு அழகு ஆண்டவன் தாளைத் தாங்குதல்.



No comments:

Post a Comment