இயற்கை இன்னல்கள் பலவற்றையும் தாங்கிக் கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழவனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கு பறை சாற்றும் மகத்தான திருநாள் தை பொங்கல் தினம் ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.
ஒவ்வொரு விவசாயக் குடிமகனும் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், மஞ்சள், கரும்பு போன்றவற்றுடன் சர்க்கரை பொங்கல் படையல் வைத்து, மாவிலை தோரணம் கட்டி இயற்கையையும், சூரியனையும் வழிபடும் தமிழர் திருநாள் தை பொங்கல்.
தை பொங்கல் விழா தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும்.
சிந்து சமவெளி நாகரீகத்தில் ஜல்லிக்கட்டு
ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
காளைகளை அடக்கும் திருவிழா ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற அயல்நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அது கூர்மையான வாளைக் கொண்டு காளையை காயப்படுத்தி அடக்கும் விளையாட்டுகளாகும். ஆனால் தமிழகத்தில் கொம்புகள் கூர் சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு தனித்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல, தமிழரின் வீரத்திற்கும், வீரத்துடன் ஒன்றிணைந்த பண்பாட்டிற்கும் சான்றாகத் திகழ்கிறது.
4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீக காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இந்த முத்திரை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 2000ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது.
மேலும் தமிழ் எழுத்தாளரும், சிந்து சமவெளி காலத்திய எழுத்துகளில் வல்லுனருமான ஐராவதம் மகாதேவனும் இதுபற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதை கடந்த 1977ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டது.
இந்த முத்திரை கி.மு. 2000-ம் ஆண்டை சேர்ந்தது. இதை பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிந்து சமவெளி நாகரீக காலத்தில் நடைமுறையில் இருந்த ஜல்லிக்கட்டை இந்த முத்திரை பிரதிபலிப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இதில் உள்ள படத்தை வைத்து இருவிதமான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒருசாரார் ஒரு காளை ஒன்றுக்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களை தூக்கி வீசுவதாக கூறுகிறார்கள். 2 வீரர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும், ஒரு வீரர் காளையை பிடிக்க முயல்வது போலவும், மற்றொருவர் பல்டி அடிப்பது போலவும், 5-வது நபர் தரையில் விழுந்து கிடப்பது போலவும் இந்த சித்திரம் அமைந்திருப்பதாக கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு
தமிழர் இலக்கியத்தில் ‘கொல்லேறு தழுவல்’என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது.
இன்றளவும் இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறு தழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும், அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீர சோதனைதான்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் ஒரு முறை இறங்கிய காளையர் எவரும் அடுத்த ஆண்டும் இறங்கி தங்கள் திறனை தொடர்ந்து நிரூபிக்காமல் இருப்பதில்லை. உடல் பலம் உள்ளவரை ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு, தங்கள் உயிரை பணயமாக வைத்து தமிழரின் வீர மரபை தொடர்ந்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடக்கும் பல ஊர்களில் ஒரு காலத்தில் தீவிரமாக காளை அடக்குவதில் போட்டி போட்டவர்கள், இன்று வயது முதிர்ந்த நிலையிலும் கூட, ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் பட்டிக்குச் சென்று, சீரிக் கொண்டு பாய்ந்துவரும் காளை ஒன்றை தொட்டுவிட்டு வீடு திரும்பும் வழக்கம் இன்றும் உள்ளது.
|
|
No comments:
Post a Comment