Saturday 5 May 2012

ஆன்மிக சிந்தனைகள் »சின்மயானந்தர் Page 2


சாதனை இறைவனால் நிகழ்ந்தது

* நான் செய்கிறேன்; நான் சாதனை புரிந்தேன்; என்னாலேயே செய்ய முடிந்தது என்பன போன்றவை எல்லாம் ஆணவத்தின் அடையாளங்கள். நாம் செய்பவை அனைத்தும் இறைவனால் நிகழ்ந்தவை என்று எண்ணும்போது நம்முடைய ஆணவம் மறைகிறது.
* சாதிக்கும் போது நாமே சொந்தமாக சாதித்து விட்டதாக எண்ணிக் குதித்து மகிழ்கிறோம். பெருமையால் தலைகனத்து விடுகிறது. ஆனால், தவறுகள் நேர்ந்து நாம் துன்பப்படும் போது, "ஆண்டவன் ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ?' என்று குமுறுகிறோம். "கடவுளே! உனக்கு கண் இல்லையா?' என்று கதறுகிறோம். 
* இறைவன் நமக்கு சக்தியையும், சிந்திக்கும் ஆற்றலையும் கொடுத்திருக்கிறான். அதைக் கொண்டு நல்ல செயல் களை செய்யும் வாய்ப்புக்களை மட்டுமே நாம் தேடிப் போக வேண்டும். 
* "உலகத்தின் முதலும் முடிவும் நானே' என்ற சுயநலத் துடன் வாழ்ந்தால் மிருகங்களைப் போல நம் வாழ்க் கையும் மாறி விடும். நம்முடைய அறிவு சிற்றறிவு; நம்மை வழிநடத்த பேரறிவாளனான இறைவன் இருக் கிறான் என்ற மனத்தெளிவோடு நாம் செயல்பட வேண்டும்.

எல்லாம் இறைவன் செயல்

* ""நான் செய்கிறேன். நான் தான் சாதனை புரிந்தேன். என்னாலே தான் இதைச் செய்ய முடிந்தது'' என்று கருதும் ஆணவப் போக்கை மாற்றி, ""இறைவனின் திருவருளால் நன்றாக நடந்தது. இச்செயல் அவனுக்கே சமர்ப்பணம்,'' என்று சரணாகதி அடைவதனால் நம்முடைய அகந்தை அறவே ஒழிந்து விடும். 
* இன்று நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும், வசதியாக வாழ வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் நம் பூர்வஜன்மத்து வாசனையால் உண்டாகும் செயல்களாகும். 
* பொதுவாக, நம்மில் பலரும் இதை சந்திக்காமல் இருக்க முடியாது. வெற்றி கிடைத்தால் என்னால் உண்டானது என்று மகிழ்ச்சியில் குதிப்பதும், தோல்வி என்றால் ஏன் தான் கடவுள் இப்படி சோதிக்கிறான் என்று உள்ளம் குமுறுவதும் உண்டு. இந்தப் போக்கை தவிர்க்க வேண்டும். 
* இறைவன் நமக்கு உடம்பில் சக்தியையும், சிந்திக்கக் கூடிய சிந்தனைத் திறனையும் கொடுத்திருக்கிறார். அதை வைத்துக் கொண்டு நல்லபாதை என்பதை தீர்மானிப்பது நம் கடமையாகும். நாம் செய்யும் செயல்கள் நமக்கும் பிறருக்கும் நன்மை தருவதாக அமைவது தான் சரியான வாழ்க்கை முறை. அதைவிடுத்து, சுயநலமாக வாழ்வது மிருகத்தனமானது.


சிந்தையும் உடலும் ஒன்றாகட்டும் நாம் செய்யும் ஒரு வேலையில்

நம்முடைய மனம் ஈடுபடவில்லை என்றால், நமக்கு சலிப்பும் சோர்வுமே உண்டாகும். உங்களுக்குப் பிடிக்காத ஒரு நபருடன் நல்லவெயிலில் அலைந்து திரிய வேண்டி இருக்கிறது என்றால் உங்கள் மனநிலை நிச்சயம் வருத்தம் கொள்ளும். அதே நேரத்தில் மனதிற்குப் பிடித்தமானவரோடு அலைய வேண்டி இருக்கிறது என்றால் சலிப்போ சோர்வோ நம்மைத் தீண்டுவதில்லை. இரண்டிலும் நடந்தது என்னவோ ஒன்று தான். ஆனால், உற்சாகமும், சலிப்பும் எதனால் உண்டாகின்றன.
* சிந்தனையும், உடலும் ஒன்றினால் அங்கு உற்சாகம் ஊற்றெடுக்கிறது. சிந்தனையும், உடலும் ஈடுபடாத விஷயத்தினால் மனம் சலிப்படைகிறது.
* சிந்தனையையும், உடல் உழைப்பையும் இணைக்கும் பாலமே தியானம். மனம் ஒருமுகப்பட்டுவிட்டால் எந்த வேலையிலும் சுறுசுறுப்பும், திருப்தியும் உண்டாகும். சலிப்பிற்கு அங்கு இடமே இல்லை. இப்படி நாள்தோறும் மனதிற்கென்று ஒரு பயிற்சியாக தியானத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். இத்தியானப் பயிற்சியில் கவனம் செலுத்தி, மனஒருமையோடு கடமைகளைச் செய்பவர்கள் நாளடைவில் தங்களின் பணியில் கூடுதல் திறமையும், வளர்ச்சியையும் பெற்றுவிடுவதை உணர்வார்கள்.

சுயநலமற்ற செயல்பாடு

ஒருவன் தன் வேண்டாத தீய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளவும், தவறான வழியில் பணம் சம்பாதிக்கவும் கொலை செய்கிறான். அதனால் அவனது வாழ்நாளே வீணாகிறது. ஆனால், நாட்டைக் காக்க எல்லைக்குச் செல்லும் போர்வீரன் அங்கே எதிரிகளைச் சுட்டு வீழ்த்துகிறான். போர்புரிவதைத் தன் கடமையாகச் செய்கிறான். அதன் பின் தேசத்திற்குள் வந்தபின் யாரைக் கொல்லலாம்? என்று அவன் அலைவதில்லை.பிரசவ சமயத்தில் தேவைப்பட்டால் கர்ப்பிணிப்பெண்ணுக்கு மருத்துவர் பிராந்தியைக் கொடுக்கிறார். அவளும் அதைக் குடித்து விடுகிறாள். ஆனால், பெண்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாவதில்லை. குழந்தையுடன் வீடு திரும்பியபின், அவள் எங்கே அந்த பிராந்தி? என்று கேட்பதில்லை. ஆனால், குடிகாரனின் நிலைமை அப்படியல்ல. அவனால் நாள்தோறும் குடிக்காமல் இருக்க முடிவதில்லை.ண நம்முடைய நோக்கம் உயர்ந்ததாக சுயநலமில்லாததாக இருந்தால் நாம் செய்யும் செயல்களின் வாசனை நம்மை பாதிப்பதில்லை. இப்படி, ஒவ்வொரு கடமையையும் பரோபகாரமாகச் செய்யும் போது பந்தங்களில் சிக்கிக்கொள்ள மாட்டோம். ஏற்கனவே சுயநலத்துடன் சில செயல்களைச் செய்திருந்தாலும் கூட, அதன் பாதிப்பும் நம்மை விட்டு முழுமையாக நீங்கி விடும். இந்த ரகசியத்தையே "கர்மயோகம்' என்று ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

இன்றே நல்ல நாள் தான்!

வாழ்வில் எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும் என்றோ முற்றிலும் விலகி விட வேண்டும் என்றோ ஆன்மிகம் போதிக்கவில்லை. செல்வம் நமக்கு தகாதது அல்ல. அதை மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்று தணியாத ஆசை தான் கூடாது. சேர்த்த செல்வத்தை நல்ல முறையில் சமூகத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றே ஆன்மிகம் வலியுறுத்துகிறது. பொறுப்பினை இறுகப் பற்றிக் கொண்டு விடாப்பிடியாக தொங்கக்கூடாது. ஜனகர் சக்ரவர்த்தியாக இருந்தாலும், அரண்மனையிலே வாழ்ந்தாலும், மனதை எதிலும் ஒட்டாத வகையில் ஞானமார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தார். இதனால் தான் அவரை ராஜா என அழைக்காமல், "ராஜ ரிஷி' என்று அழைத்தனர். ராமனுக்கு மாமனாராகும் தகுதியே இதனால் தான் கிடைத்தது. ஞானமார்க்கத்தில் எப்படி நுழைவது என்று கேட்காதீர்கள். உடனே முயற்சியைத் தொடங்குங்கள். ஆரம்பித்தால் தானாகவே ஞானம் மெல்ல தலைகாட்டத் தொடங்கிவிடும். இன்றை விடச் சிறந்த நாள் வேறு இல்லை. பலரும் ஓய்வு பெறும் வயது வரை காத்திருக்கின்றனர். அப்படி காத்திருக்கத் தேவையில்லை. அப்போது வேறு பல சங்கடங்கள் குறுக்கிடக்கூடும். ஆன்மிக வழியில் செல்ல விரும்புபவர்கள் எளியமுறையில் இயன்றவரை முயற்சிகளைப் படிப்படியாக பின்பற்றத் தொடங்குவதே சிறந்தது.

செலவில்லாத தானம்

* நாம் வாழும் இந்த வாழ்க்கை ஆற்றின் நீரோட்டம் போன்றது. அதைத் தடுத்து நிறுத்துவதால் பயன் ஏதும் ஏற்படாது. ஆனால், வழி மாற்றி வடிகால் அமைத்து பயன்படுத்தினால் பயன் பெறலாம்.
* சொர்க்கம் என்பது இறந்தபிறகு தரப்படும் பரிசோ, நரகம் என்பது இறந்தபின்அளிக்கப்படும் தண்டனையோ அல்ல. இவை இரண்டுமே வாழும் போதே மனிதன் அனுபவிக்கும் இருநிலைப்பாடுகளே. 
* மனமும், புத்தியும் தூய்மையாய் இருக்க இருக்க அந்த மனிதன் எண்ணும் எண்ணங்கள் பிரகாசம் மிக்கதாக இருக்கும். எவனிடத்தில் இந்த எண்ணம் அதிகபட்ச உச்சத்தை அடைகிறதோ அவனே மகான் ஆகிறான்.
* பணத்தைக் கொடுப்பது மட்டுமே தானமல்ல. நல்ல உள்ளம் படைத்தவர்கள் பிறரிடம் அன்பு மொழிகளால் கூட தானத்தைச் செய்ய முடியும். ஆண்டவன் எந்த செல்வத்தை தந்திருக்கிறாரோ அதைக் கொண்டு நல்லவனாக வாழ்தலே போதுமானது.
* இருள் வந்துவிட்டதே என்று கவலை கொள்வதால் பயனில்லை. ஒரு விளக்கை ஏற்றினால் அது தானாகவே விலகி விடும். அதேபோல் நல்லெண்ணங்களுக்கு இடம் கொடுத்தாலே தீயவை தானாகவே ஒடுங்கி விடும்.

பணியில் சலிப்பு கூடாது

உள்ளம் முழுவதும் அன்புமலர்கள் மலரும் போது, வாழ்க்கையில் அழகும் ஆனந்தமும் புல்வெளியாகப் படர ஆரம்பிக்கின் றன. அப்பசும்புல்வெளியில் தெய்வசக்தியும், மனிதபக்தியும் கைகோர்த்து நடனமிடுவதைக் காணலாம்.
பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் நம்மைத் தூக்கிப் போட்டு அலைக்கழித்து தடுமாற வைத்தாலும், எண்ணத்திலும், செயலிலும் பெருந்தன்மையோடு நடப்பவன் நிச்சயம் பாதுகாக்கப்படுவான்.அன்றாடப் பணியில் சலிப்புடன் ஈடுபடாதீர்கள். எவ்வளவு தூரம் மனமார ஈடுபடுத்திக் கொள்ள முடியும் என்பதை பாருங்கள். ஈடுபாட்டுடன் செய்யும் பணியில் மனநிறைவினைக் காண்பீர்கள்.அன்போடு ஒரு செயலைச் செய்யும் போது பெருமித உணர்வு மேலோங்கும். அப்போது எல்லாரையும் உயர்வாக மதிக்கின்ற பெருந்தன்மையை வளர்த்துக் கொள்ள இயலும்.நீங்கள் செவி கொடுத்துக் கேட்டால் மனிதனின் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, அச்சத்தை வெல்லும் துணிச்சலை, நல்ல எண்ணங்களை, இறைவனே பாராட்டும் அருள்மொழிகளைக் கேட்க முடியும்.
 உலகத்தில் நல்ல விஷயங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. வெள்ளமாக எங்கும் பாய்ந்து கொண்டுள்ளன. நம் மனக்கதவைத் திறந்து வைத்தால் நல்ல விஷயங்களை நம்மால் உணரமுடியும்.

No comments:

Post a Comment