Monday 30 April 2012

ஆன்மிக சிந்தனைகள் »புத்தர்


அனைவரையும் நேசியுங்கள்

* பிறரது குறை, நிறைகளை கவனிக்காமல், நாம் செய்யும் நல்வினை, தீவினைகளில் உள்ள குறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
* நல்ல குணமுள்ளவர்கள் எதிலும் பற்று கொள்வதில்லை. இன்பங்களை விரும்பி இரைச்சல் போடுவது இல்லை. சுகமோ, துக்கமோ எது ஏற்பட்டாலும் எழுச்சியடைவதும் இல்லை, சோர்வு கொள்வதும் இல்லை.
* பூமிக்கு ஒப்பான பொறுமையும், வாசல் தூண் போன்ற உறுதியும் சேறில்லாத குளத்து நீர் போன்ற தூய்மையும் யாரிடம் இருக்கிறதோ, அவன் பிறப்பு, இறப்பு எனும் சுழலில் சிக்கிக் கொள்வதில்லை.
* கடலில் வந்து கலக்கும் ஆறுகள் தங்கள் தனிப்பட்ட தன்மையை இழந்து, மகாசமுத்திரம் என்ற பெயரில் வழங்கப்படுவது போல், எல்லா ஜாதியினரும் தங்கள் வம்சாவளியை துறந்து ஒற்றுமையாய் இருந்தால் சகோதரர் ஆகிவிடுவார்கள்.
* அனைவரையும் நேசியுங்கள். எப்போதும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதால் வாழ்க்கையில் சந்தோஷத்தை பெறுவீர்கள்.
புத்தர்

நல்லொழுக்கம் பேணுங்கள்

* அடக்கம் இல்லாமல் ஒழுக்கம் கெட்டு நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட தியானம் செய்து ஒழுக்கத்துடன் ஒரு நாள் வாழ்ந்தவனுடைய வாழ்வு சிறப்பு உடையதாகும்.
* அரிதான கொடிய ஆசையை அடக்கி வெல்பவனின் துயரங்கள் தாமரை இலை மீது விழுந்த தண்ணீர் துளிகள் ஒட்டாமல் விலகி ஓடுவதைப் போல் அவனை விட்டு அகலும்.
* வாழ்க்கைக் கடலுக்கு நடுவே தீவைப் போல நீ அரண் செய்து கொள், ஊக்கமும் அறிவும் உடையவனாய் இரு. மாசுக்கள் அகன்று நீ தூயவனாகி விட்டால் ஒளிமிக்க மேலோர் வாழும் உலகை நீ அடையலாம். அதன்பிறகு, உனக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.
* வயது முதிர்ந்த பெரியோரை விடாமல் வணங்கி மரியாதை செய்து வருபவனுக்கு ஆயுள், அழகு, இன்பம், வலிமை என்னும் நான்கு பயன்களும் அதிகரிக்கும்.
* உடம்பின் எரிச்சலை அடக்கிக் காப்பதுடன், உடலை அடக்கப் பழக வேண்டும். தீய ஒழுக்கத்தை ஒழித்து நல்ல ஒழுக்கத்தையும் பேணி காக்க வேண்டும்.
* வாழ்வின் முடிவு என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, அதைக்கண்டு மிரளத் தேவையில்லை.
- புத்தர் 

கோபத்தை அறவே குறையுங்கள்

* அடக்கம் இன்றி ஒழுக்கம் கெட்டு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும், தியானம் செய்து ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்பவனின் வாழ்வு சிறப்புடையது.
* வழி தவறிச் செல்லும் ரதம் போலப் பொங்கி வரும் கோபத்தினை அடக்கி ஆள்பவனையே நான் சரியான சாரதி என்று சொல்வேன், மற்றவர்கள் கடிவாளக் கயிற்றைக் கையில் வைத்திருப்பவர்களே.
* எவன் ஒருவன் அடக்க அரிதான கொடிய ஆசையை அடக்கி வெல்கிறானோ, அவனுடைய துயரங்கள் தாமரை இலை மீது விழுந்த தண்ணீர் துளிகள் போல, அவனை விட்டு அகலும்.
* வயது முதிர்ந்த பெரியோரை வணங்கி மரியாதை செய்துவருபவனுக்கு ஆயுள், அழகு, இன்பம், வலிமை என்னும் பயன்கள் அதிகரிக்கும்.
* உடம்பின் எரிச்சலை அடக்கிக் காக்க வேண்டும். உடலை அடக்கிப் பழக வேண்டும். ஆசையை அடியோடு 
வேரறுத்து, நல்லொழுக்கத்தை பேணி வரவேண்டும். 
* பொறாமை, பேராசை, தீய ஒழுக்கம் இவைகளை எவன் அழித்துவிட்டானோ, அவனே குற்றமற்ற மேதாவி. அவனே உண்மையான அழகு உடையவன்.
- புத்தர்

நல்ல எண்ணம் வேண்டும்

* உண்மையைப் பேசுங்கள், கேட்பவர்
களுக்கு இயன்றதைக் கொடுங்கள், இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனின் சந்நிதியை அடையலாம்.
* எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் 
மனிதன் விரைந்து முன்னேறுவான், 
காற்றாடி காற்றை எதிர்த்துத்தான் மேல் எழும்புகிறது.
* கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும், தீமையை 
நன்மையால் வெல்ல வேண்டும், பொய்யினை உண்மையால் வெல்ல வேண்டும்.
* சந்தனக்கட்டை, மல்லிகை முதலியவற்றின் மனம் 
காற்றின் எதிர்த் திசையில் செல்வதில்லை, ஆனால், 
நல்லவர்களின் புகழ் மணமோ சூறைக் காற்றையும் எதிர்த்துக் செல்கிறது. 
* தூய்மையான எண்ணத்துடன் ஒருவன் செயல்பட்டால், அவனை விட்டுவிலகாத நிழல் போல, மகிழ்ச்சி
அவனைப் பின் தொடர்ந்து செல்கிறது.
* மரியாதையுணர்வு, அடக்கம், மனதிருப்தி, நன்றி, 
நல்ல அறிவுரைகளைக் கேட்டல் இவையே சிறந்த அதிர்ஷ்டத்தை தரும் குணங்களாகும்.
* நன்றாக கட்டப்பட்ட வீட்டில் மழை நீர் நுழைவதில்லை, அதுபோல் நல்ல உள்ளத்தில் ஆசை நுழைவதில்லை.
- புத்தர்

மகிழ்ச்சி நிழலாய் தொடரட்டும்

* உடல், மனம், நாக்கு இம்மூன்றையும் அடக்கி வாழும் அறிவாளிகளே 
உண்மையான அடக்கம் கொண்டவராவர். 
*வாய்மையை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அதில் நம்பிக்கை 
கொள்ளுங்கள். அதன் இனிமை கசப்பானது என்று கருதினாலும் அதை உறுதியாக 
நம்புவதை மட்டும் கைவிடாதீர்கள்.
* தூய்மையான எண்ணத்துடன் ஒருவன் பேசினாலும் செயல்புரிந்தாலும், அவனை விட்டு விலகாத நிழல் போல, மகிழ்ச்சி அவனைப் பின் தொடர்ந்து செல்கிறது. 
* போரில் ஆயிரம் பேரை அழித்து வெல்பவனை விட 
தன்னைத்தானே அடக்கி வென்றவனே உயர்தரமான வெற்றியாளன்.
*புதிதாய்க் கறந்த பசும்பாலைப் போல பாவச் செயல்கள் உடனேயே புளிப்பாக மாறிவிடுவதில்லை. 
நீறுபூத்த நெருப்பைப் போல உள்ளூரக் கனன்று 
கொண்டேயிருந்து மனிதனைப் பற்றுகிறது.
* அறிவுக்கூர்மையும், நேர்மையும் உறுதிப்பாடும் 
உள்ளவராய் உங்களோடு ஒத்துப்போகக் கூடிய
ஒரு துணை கிடைத்தால் அவரை வழித்துணையாய்க் கொண்டு, அவரைப் பின்பற்றிச் செல்லுங்கள்.
- புத்தர்

நல்ல மனமே சிறந்த வழிகாட்டி

* உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அதுபோல அறிவாளிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை.
* உடல்நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், மனநோயைத் தாங்க முடியாது. இதைப் போக்க நல்லதையே எண்ண வேண்டும். தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.
* அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வதே மேலானது.
* அஞ்ச வேண்டாத விஷயங்களுக்கு அஞ்சுபவனும், அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பவனும் தீய பாதையில் செல்பவர்களே. 
* நல்ல மனமே சிறந்த வழிகாட்டி. பெற்றோரோ, வேறு எந்த உறவினரோ நமக்கு உதவப் போவதில்லை. 
* தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகிவிட முடியாது. தலை நரைத்திருப்பதால் மட்டுமே ஒருவன் முதன்மையானவனாகி விடமுடியாது.
-புத்தர்



எப்போதும் நிதானமாக இருங்கள்

* சத்தியத்தையே தீபமாகப் பற்றிக் கொள்ளுங்கள். சுயநலத்தை ஒழித்து எல்லா உயிர்களையும் நேசியுங்கள். ஒழுக்கம் என்னும் அடித்தளத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
* ஆயிரம் பேர் கொண்ட படையை வெற்றி கொள்வதைக் காட்டிலும், தன்னைத் தானே வென்றவனே வெற்றிவீரன். 
* மனிதன் நல்ல எண்ணங்களுடன் செயல்புரிந்தால் அவனைப் பின்தொடர்ந்து இன்பம் நிழல்போல வரும். 
* தூங்க முடியாமல் விழித்திருப்பவனுக்கு இரவு கொடியதாகும். களைத்துப் போனவனுக்கு செல்லும் வழி மலைப்பைத் தரும். அதுபோல தர்மத்தை பின்பற்றாதவனுக்கு வாழ்க்கை துன்பத்தைத் தரும்.
* வெறுப்பு, கடுஞ்சொல் இவற்றிலிருந்து விலகி நில்லுங்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் அனைவரையும் நேசித்து மகிழுங்கள். எந்த நிலையிலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள். 
* நாவின் ருசிக்காக உயிர்க்கொலை செய்பவன் வாழும்போது மட்டுமில்லாமல் மரணத்திற்குப் பின்னும் துன்பத்தை அடைவான்.
-புத்தர்


அன்பான ஒரு வார்த்தை போதும்!

* ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும் நல்லவையாக இருக்க வேண்டும்.
* நன்மை ஏற்பட்டாலும் சரி, கெடுதல் ஏற்பட்டாலும் சரி உனது செயல்களின் பலன்களை நீ அடைந்தே ஆகவேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை.
* எவனும் தனக்குத் தானே தலைவனாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். தன்னைத் தானே அடக்கப் பழகிக் கொண்டவன், தலைமை ஏற்கத் தகுதி உடையவனாகிறான். தலைமைப் பண்புகளுக்கு எல்லாம் அடக்கமே அடிப்படைப் பண்பாகும்.
* மூடர்களுடன் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும், தனியே வாழ்வது சிறந்தது. துஷ்டர்களுடன் நட்புக் கொள்வதும் இதே போன்றதே. மூடர்களுடன் சேர்ந்தால் கவலையும், துஷ்டர்களுடன் சேர்ந்தால் பாவமும் நமக்கு உண்டாகும்.
* அறிவோடும், விழிப்போடும் வாழ்க்கை நடத்துபவர்கள் ஞானம் என்னும் மேலான நிலையை அடைவர். அவர்கள் செல்லும் வழியை எமனால் கூட அறிய முடியாது.
*புயல் காற்றுக்கு அசையாமல் பாறை இருப்பது போல, மெய்யுணர்வு பெற்ற ஞானிகள் புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒன்றாகவே கருதுவர். 
-புத்தர்

தானே தனக்குத் தலைவன்

* சத்தியத்தையே தீபமாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். அடைக்கலமாக ஒருவன் சத்தியத்தை சரணாகதி அடைந்து விட்டால், அதன் பின் வேறொன்றையும் சரணடைய வேண்டியதில்லை.
* ஒருவன் தானே தனக்குத் தலைவன். வேறு யார் தலைவனாக இருக்க முடியும்? தன்னை நன்றாக அடக்கப்பழகிக் கொண்டவன் பெறுவதற்கு அரிய நல்லபேறுகளை அடையத் தகுதியுடைவனாகிறான்.
* கரை செம்மையாக வேயப்பட்டிருந்தால் வீட்டில் மழைநீர் இறங்குவதில்லை. அதுபோல, நன்கு நெறிப்படுத்தப்பட்ட மனதில் வீணான ஆசைகள் புகுவதில்லை.
* மனிதனின் வாழ்க்கையை அவனுடைய மனோதர்மமே நிர்ணயம் செய்கிறது. நல்ல எண்ணத்தையே சிந்திக்கும் ஒருவனை நிழல்போல இன்பம் தொடர்ந்து கொண்டிருக்கும். 
* நல்ல எண்ணங்களால் தன் உள்ளத்தை தூய்மையாக்கிய நிலையில் மனமானது, ஆழமான,அமைதியான ஏரியைப் போல் தூய்மையும், நிம்மதியும் பெற்றுவிடும். 
* மடிமை என்னும் சோம்பலில் வாழவேண்டாம். மூடர்கள் மட்டுமே சோம்பலில் மூழ்கி விடுவார்கள்.
* பரிசுத்தமான ஒழுக்கம் மனிதனை அபாயங்களில் இருந்தும், நெருக்கடியான சூழ்நிலைகளில் இருந்தும் பாதுகாக்கும். வாழ்வில் உயர்நிலைகளை அடைய ஏணிபோல தூயஒழுக்கம் உதவுகிறது. 
புத்தர்


படித்தால் மட்டும் போதுமா?

* உடலை அடக்கி, நாவை அடக்கி, மனதையும் அடக்கியுள்ள ஞானிகளே உண்மையில் அடக்கம் உடையவர்கள் ஆவர். 


* தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை தவறுதலான வழியில் பயன்படுத்தி தீங்கு செய்பவன் நிச்சயம் வாழ மாட்டான்.
* பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாக மட்டுமே பகையை வெல்ல முடியும்.
* அறிவும், கல்வியும் மட்டுமே பாராட்டத்தக்கது என்று கருதுபவன் எந்நாளும் தனித்தே தான் வாழ நேரிடும்.
* அநீதி செய்து மற்றவர்களுக்கு துன்பம் இழைப்பவர்கள் வென்றாக சரித்திரம் இல்லை. அவர்கள் தோல்வியைத் தழுவுவது உறுதி.
* நல்லவழியில் செம்மையாக நிர்வகிக்கப்பட்ட மனமே நமக்கு என்றென்றும் உதவி செய்ய தகுதி உடையதாக இருக்கும்.
* நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்கு நன்மையையும், ஆறுதலையும் தருவதாக அமையவேண்டும். ஆனால், மாறாக துன்பத்தை அல்லவா நமக்குத் தருகின்றன.
* ஒருவரின் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்குமானால் அவர் அழகும், சுகந்தமும் நிறைந்த வண்ண மலரைப் போல எல்லோருக்கும் பயன்உடைய மனிதராக இருப்பார். 
-புத்தர் 

No comments:

Post a Comment