Tuesday 1 May 2012

சினேகா கழுத்தில் 2 முறை தாலி கட்டுவேன்: பிரசன்னா பேட்டி


நடிகர் பிரசன்னாவுக்கும், நடிகை சினேகாவுக்கும் வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. இது, காதல், கலப்பு திருமணமாகும். சினேகா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். பிரசன்னா பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். 

திருமணம் தொடர்பாக சினேகாவும், பிரசன்னாவும் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தார்கள். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர்கள் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- திருமணத்துக்குப்பின் சினேகா தொடர்ந்து நடிப்பாரா? 

பிரசன்னா பதில்:- திருமணத்துக்குப்பின் சினேகா நடிக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அவர் நல்ல நடிகை என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. திருமணத்துக்குப்பின் அவர் விருப்பப்பட்டால் நடிக்கலாம், நடிக்காமலும் இருக்கலாம். அவருக்கு, நான் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். 

கேள்வி:- தேன் நிலவுக்கு எந்த நாட்டுக்கு போகிறீர்கள்? 

பிரசன்னா பதில்:- சினேகாவும், நானும் நடித்து முடித்துக்கொடுக்க வேண்டிய சில படங்கள் உள்ளன. அந்த படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு, வருகிற ஜுன் மாதம் தேன் நிலவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். எந்த நாட்டுக்கு செல்வது என்பதை முடிவு செய்யவில்லை. திருமணத்துக்குப்பிறகு பார்க்கலாம். 

கேள்வி:- உண்மையை சொல்லுங்கள். நீங்கள் எத்தனை வருடங்களாக காதலித்தீர்கள்? 

பிரசன்னா பதில்:- இரண்டு வருடங்களாக காதலித்தோம். எங்கள் 2 பேரின் வீட்டிலும் சம்மதித்தபிறகுதான், காதல் பற்றி வெளியில் சொல்ல ஆரம்பித்தோம். 

கேள்வி:- உங்கள் இருவரில் காதலை முதலில் பரிமாறிக்கொண்டது யார்?

பிரசன்னா பதில்:- நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாகவே இருந்தோம். எங்களுக்கிடையே காதல் மலர்ந்தபின் திருமணம் செய்துகொண்டால் என்ன? என்று யோசிக்க ஆரம்பித்தோம். வாழக்கைப் பற்றி நிறைய பேசினோம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம். நான், அவருக்கு கணவராக இருந்தால் எப்படி இருக்கும்? அவர், எனக்கு மனைவியாக வந்தால் எப்படி இருக்கும்? என்பதை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம். இருவருக்குமே வாழ்க்கையைப் பற்றி ஒரேமாதிரியான அபிப்பிராயம் இருந்தது. 

கேள்வி:- உங்கள் திருமணம் எந்த முறைப்படி நடக்கும்? 

பிரசன்னா பதில்:- சினேகா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். அதனால் அந்த முறைப்படி முதலில் திருமணம் நடக்கும். அதன்பிறகு எங்கள் பிராமண முறைப்படி நடக்கும். சினேகா கழுத்தில் நான் இரண்டு முறை ஸ்ட்ராங் காக தாலி கட்டுவேன். 

கேள்வி:- திருமணம் முடிந்தபின் தனிக்குடித்தனமா, கூட்டு குடித்தனமா? 

பிரசன்னா பதில்:- தனிக்குடித்தனம்தான். சினேகாவுக்கு சாதாரண பெண்ணாக சமையல் எல்லாம் செய்து வாழவேண்டும் என்று ஆசை. எனவே திருமணம் முடிந்ததும் தனிக்குடித்தனம் போவோம். 

இவ்வாறு பிரசன்னா பதில் அளித்தார். 

அதன்பிறகு சினேகா கூறியதாவது:- 

நான் கடந்த 12 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. திருமணத்துக்குப்பிறகு நான் நடிப்பதா, வேண்டாமா? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. திருமணம் முடிந்தபிறகு அதை பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். 

மேற்கண்டவாறு சினேகா கூறினார்.

No comments:

Post a Comment